இதனால்தான் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை - மனம்திறந்த தமிழக வீரர் நடராஜன்
காயம் காரணமாகவே இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போனதாக தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக மாவட்டம் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், "பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் விளையாட்டிற்காக தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். பெண்கள் பலரும் இன்று விளையாட்டுத் துறைகளில் சாதிக்கின்றனர்" என்றார்.
இந்திய அணியில் வாய்ப்பு குறித்து நடராஜன் பேசும்போது, "இந்திய கிரிக்கெட் அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்திய அணியில் சரியாக இடம் கிடைக்கவில்லை. விளையாட்டுத் துறை சிறப்பாகவும், வேகமாகவும் முன்னேறி வருகின்றது" எனவும் தெரிவித்தார்.
நடராஜன் 61 ஐபிஎல் போட்டியில் விளையாடி 67 விகேட்டுக்களை கைப்பற்றியுள்ளார். ஆனால் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் (3 விக்கெட்), 2 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.