பிரான்ஸ் தேர்தல் முதல் சுற்று... தீவிர வலதுசாரி National Rally கட்சி ஆதிக்கம்
பிரான்ஸ் தேர்தல் முதல் சுற்று வாக்கெடுப்பில் எதிர்பார்த்தது போலவே, Marine Le Pen என்பவரின் தீவிர வலதுசாரி National Rally கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
National Rally கட்சி ஆதிக்கம்
அகதிகள், புலம்பெயர்வோருக்கு எதிரானக் கொள்கை கொண்ட National Rally கட்சி பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறும் நிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஞாயிறன்று நடக்கும் இரண்டாவது சுற்றிலும் National Rally கட்சி ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இடதுசாரிகள் மற்றும் நடுநிலையாளர்கள் உடனடியாக நாட்டின் நிலை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கருத்துக்கணிப்புகளில் குறிப்பிட்டது போலவே National Rally கட்சி 34 சதவிகித வாக்குகளை மொத்தமாக கைப்பற்றியுள்ளது. இரண்டாவது இடத்தில் தீவிர இடதுசாரிகளும் இமானுவல் மேக்ரானின் கூட்டணி மிக மோசமான நிலையில் மூன்றாவது இடத்திலும் தள்ளப்பட்டுள்ளது.
National Rally கட்சி மொத்தமாக 12 மில்லியன் வாக்குகளை கைப்பற்றியுள்ளது. 2022ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகளைவிடவும் மூன்று மடங்கு அதிக வாக்குகளை National Rally கட்சி அள்ளியுள்ளது.
289 ஆசனங்களை கைப்பற்றும்
தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் Marine Le Pen தெரிவிக்கையில், பிரெஞ்சு மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் வலிமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும், ஜனாதிபதி மேக்ரானின் மலிவான மற்றும் ஆபத்தான 7 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள பதில் இதுவென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, இமானுவல் மேக்ரானின் கூட்டணியை National Rally கட்சி மொத்தமாக துடைத்து நீக்கியுள்ளது என்றும் Le Pen குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலில் 88 ஆசனங்களை கைப்பற்றியிருந்த National Rally கட்சி, இந்த முறை ஆட்சி அமைக்கத் தேவையான 289 ஆசனங்களை உறுதியாக கைப்பற்றும் என்றே Le Pen நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இரண்டாவது சுற்றில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற கருத்து பரவலாக இருந்தாலும், தற்போதைய நிலை தொடர்ந்தால் பிரான்ஸ் வரலாற்றில் தீவிர வலதுசாரி கட்சி ஒன்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது என்பது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இதுவே முதல் முறையாக இருக்கும்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் திடீரென்று நாடாளுமன்றத்திற்கான தேர்தலை அறிவித்த இமானுவல் மேக்ரான் தீவிர வலதுசாரிகளுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்.
69 சதவிகித வாக்குகள்
இதனிடையே, தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கத்தை முறியடிக்க உருவாக்கப்பட்ட தீவிர இடதுசாரிகளின் கூட்டணி 29 சதவிகித வாக்குகளை கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து, தீவிர வலதுசாரிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க நம்மிடம் ஒரு சுற்று வாக்கெடுப்பு எஞ்சியுள்ளது என்றும் அனைத்து முற்போக்காளர்கள் மற்றும் மனிதநேயவாதிகள் ஒன்றிணைந்து New Popular Front கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
2022ல் வெறும் 47.5 சதவிகித வாக்குகளே தேசிய அளவில் பதிவான நிலையில், தற்போது 69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த சதவிகிதம் என்றே கூறுகின்றனர்.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கூட்டணி 20.5 முதல் 23 சதவிகித வாக்குகளை கைப்பற்றியிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |