உக்ரைனுக்கு உதவ நேட்டோ அமைப்பு விடுத்த கோரிக்கை: சுவிட்சர்லாந்து மறுப்பு...
போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் கோரிக்கைக்கு சுவிட்சர்லாந்து மறுப்பு தெரிவித்துவிட்டது.
ரஷ்ய உக்ரைன் போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க நேட்டோ அமைப்பு சுவிஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அது சட்டப்படியும், நடைமுறை அடிப்படையிலும் சுவிட்சர்லாந்தின் நடுநிலைத் தன்மைக்கு எதிரானது என்று கூறி சுவிஸ் பெடரல் அரசு அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
உண்மையில், சில சுவிஸ் மாகாணங்கள் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனவாம். ஆனால், பெடரல் அரசு அதை நிராகரித்துவிட்டது.
விடயம் என்னவென்றால், ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் ஒப்பந்தங்களின்படி (Hague Agreement of 1907), சிகிச்சை பெற்ற வீரர்கள் குணமடைந்த பின்பு மீண்டும் போரில் பங்கேற்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால், உக்ரைனைப் பொருத்தவரை போர் முடிவது போலத் தெரியவில்லை என்பதால், அது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Image: AP