நவராத்திரி 2022 இரண்டாம் நாள்: அம்பாளை பூஜிப்பது எப்படி?
இன்று நவராத்திரியின் இரண்டாம் நாளாகும்.
நவராத்திரியின் ஒன்பது நாளும் சிறப்பானதாக கருதப்படும் நிலையில், ஒவ்வொரு நாளுக்குரிய சிறப்பையும் தெரிந்து கொண்டு நவராத்திரி விரதம் இருந்து, அம்பாளை வழிபடுவது கூடுதலான சிறப்பை தரும்.
அந்தவகையில் இந்த இரண்டாம் நாளில் அம்பாளை எப்படி பூசை செய்ய சிறந்த நேரம் எது? பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.
வழிபட வேண்டிய சக்தி தேவி: ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, கௌமாரி அம்மன் மற்றும் பிரம்மச்சாரிணி
திதி: துவதியை
நிறம்: சிவப்பு
மலர்: முல்லைப் பூ
கோலம்: கோதுமை மாவினால் கட்டம் போட்ட கோலம் இட வேண்டும்
ராகம்: கல்யாணி ராகம்
நைவேத்தியம்: காலை நேரத்தில் புளி சாதம் மற்றும் மாலை நேரத்தில் வெள்ளை பயத்தம் பருப்பு சுண்டல்
மந்திரம்: ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்
பலன்கள்
நவராத்திரியின் இரண்டாம் நாளில், துர்க்கையின் பல வடிவங்களை வழிபடலாம். பார்வதி தேவியின் மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்கள் தான் கொற்றவை தேவி. அதில் மிகவும் சக்தி வாய்ந்த அவதாரம் தான் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி. முல்லைப்பூவும் மறு என்ற இலையும், ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு மிகவும் விருப்பம் என்று நம்பப்படுகிறது.
மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தாலான பொருட்களை தானம் செய்வது, சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கும்.
செவ்வாய் கிரகத்தைக் கட்டுப்படுத்தும் கிரகம் தான் பிரமச்சாரிணி தேவி, இவரை பூஜிப்பவருக்கு செவ்வாய் கிரக தோஷம் மற்றும் தாக்கம் நீங்கும் என்பது ஐதீகம்.
பூஜைக்கான நேரம்:
காலை 9 மணிக்குள் மாலை 6 மணிக்கு மேல்
பூஜை செய்யும் முறை:
பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இன்று ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தை ஒலிக்கச் செய்து பூஜை செய்யலாம்.
அம்பாளின் திருவுருவப் படத்துக்கு முல்லை மாலை சூட்டி அலங்கரிக்கலாம். கொலு வைக்கப்பட்ட இடத்தில், கோதுமை மாவில் கட்டம் கோலம் போட்டு, முதல் படிக்கு கீழே விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.
கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.
நைவேத்தியமாக புளி சாதம் செய்து அம்மனுக்கு படைக்கலாம். அதை வீட்டில் பெண்களுக்கு முதலில் சாப்பிடக் கொடுத்து அனைவருக்கும் விநியோகிக்கலாம்.
மாலை நேரத்தில், அதே போல சுண்டல் நைவேத்தியம் செய்து, வீட்டுக்கு வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் வழங்கலாம்.