பிரித்தானியாவில் இருந்து தாயகம் திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்!
நவாஸ் ஷெரீப்புக்கு 2018ஆம் ஆண்டு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
மற்ற வழக்குகளையும் சேர்த்து அவருக்கு மொத்தம் 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 130 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரித்தானியாவில் இருந்து அடுத்த மாதம் தாயகம் திரும்புவார் என அந்நாட்டின் மத்திய மந்திரி ஜாவித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
பனாமா ஊழல் உட்பட பல்வேறு வழக்குகளால் நவாஸ் ஷெரீப்புக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் தனக்கு உடல்நலம் சரியில்லை, எனவே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறிய அவர், நீதிமன்றத்தின் அனுமதியுடன் கடந்த 2019ஆம் ஆண்டு பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு சென்றார். ஆனால் அவர் அதன் பின்னர் நாடு திரும்பவில்லை.
தற்போது அவரது சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக உள்ள நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தானுக்கு திரும்புவார் என தகவல் வெளியான நிலையில், தற்போது மத்திய மந்திரி ஜாவித் லத்தீப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
லாகூரில் ஊடகத்தினரிடம் பேசிய அவர், நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் வராமல் இம்ரான் கானுக்கு எதிரான அரசியல் வலுப்படாது எனவும், அடுத்த மாதம் நவாஸ் ஷெரீப் தாயகம் திரும்புவார் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறுகையில், 'எனது தந்தை நாடு திரும்பி விரும்புகிறேன். ஆனால் அவர் திரும்புவதற்கு சில சிக்கல்கள் தடையாக உள்ளன' என தெரிவித்தார்.