குல தெய்வ கோவிலிற்கு தம்பதியினராக சென்ற விக்னேஷ் ஷிவன்-நயன்தாரா தம்பதி!
தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் உள்ள மேல வழுத்துார் கிராமத்தில் அமைந்திருக்கும் ஆற்றங்கரை ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோயிலானது இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயிலாகும்.
இந்த கோவிலில் நேற்று இருவரும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
நயன்தாரா வந்திருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கோயில் முன்பு திரண்டனர்.
பாதுகாப்பிற்காக ஆண், பெண் போலீசார் நிறுத்தப்பட்டனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ரவி என்பவர் இருவரும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
கோயில் பூசாரி, ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்தார்.
அப்போது நீண்ட நேரம் கும்பிட்டபடி நயன்தாரா மனமுருகி வேண்டிக்கொண்டார்.
பின்னர், இருவரும் பொங்கல் வைத்து,சுவாமிகளை வழிபட்டு பரிவார தெய்வங்களுக்கு தீபம் காட்டி இருவரும் ஒன்றாக சாமி கும்பிட்டு திருநீர், குங்குமம் பூசிக் கொண்டனர்.
கோயிலுக்குள் ஏராளமானோர் வர முயன்றதால் கோயில் வெளிக்கதவை பூட்டி விட்டனர்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி கும்பிடுவதைப் பலரும் வீடியோ எடுத்ததால் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
திருமணத்திற்கு முன் குல தெய்வ கோவில் வந்த காதல் ஜோடிகள்!
இது குறித்து அவர்களுடன் இருந்தவர்கள் கூறுகையில்,`திருமணத்திற்கு முன்பு குலதெய்வக் கோயிலுக்கு வந்த நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரும் பொங்கல் வைத்தனர்.
இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வழிப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதைத் தொடர்ந்து நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்குத் தாயானார்.
அப்போதே எல்லாம் நல்லபடியாக முடிந்த பின்னர் மீண்டும் குலதெய்வக் கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதாக இருவரும் வேண்டிக் கொண்டனர்.
ஆகையால் இவர்கள் குல தெய்வக்கோவிலிற்கு சென்று வழிப்பட்டதாக கூறப்படுகின்றது.