நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரம்: விசாரணை அறிக்கை சொல்வது என்ன?
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத் தாய் முறை மூலம் இரட்டை குழந்தையை பெற்றுக் கொண்டிருப்பது தமிழக அரசின் விசாரணை அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடந்த ஜூன் 9ம் திகதி சென்னைக்கு அருகில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே அக்டோபர் 9ஆம் தேதி இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் படங்களை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி தங்களது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தங்களுடைய குடும்பத்து புதிய வரவை வரவேற்பதாக தெரிவித்திருந்தார்கள்.
திருமணமான சில மாதங்களிலேயே குழந்தையுடன் போஸ் கொடுத்த இந்த தம்பதி, செயற்கையாக குழந்தை பெற்றுக் கொண்டதாகவும், வாடகைத்தாய் முறையில் மூலம் குழந்தையை பெற்று இருந்தால் முறையான விதிகள் கடைபிடிக்கப்பட்டதா என்பது போன்ற விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரவின.
Nayan & Me have become Amma & Appa❤️
— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️?
Need all ur blessings for our
Uyir?❤️& Ulagam?❤️ pic.twitter.com/G3NWvVTwo9
இதனால் இந்த விவகாரத்தை விசாரிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கபடும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.
இந்த நிலையில் விசாரணை குழுவின் விசாரணை அறிக்கை குறித்த செய்திக்குறிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது.
இதில் விசாரணையில் இத்தம்பதி மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ஐசிஎம்ஆர்) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் படி குழந்தை பிரசவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பதிவு திருமணம்:
வாடகை தாய் முறையில் குழந்தையை பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் திருமணமாகி 5 ஆண்டுகளாவது நிறைவு பெற்று இருக்க வேண்டும் என்ற நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் பதிவுத்திருமணம் 11.3.2016இல் நடைபெற்றதாக பதிவுச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவுத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.16.2இன்படி இந்த தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்த மருத்துவச் சான்று விசாரணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
வாடகைத்தாய்:
ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகள் பிரிவு 3.10.5இன்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்று உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வாடகைத்தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால்,இச்சட்டத்துக்கு முந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைத்தாய் ஆக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வாடகைத்தாய் பேறுகாலத்தின் போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கருத்தரித்தல் நடைமுறை:
தம்பதியினரிடம் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சினை முட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கரு முட்டைகள் உருவாக்கப்பட்டு உறை நிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
பின் 2021, நவம்பர் மாதத்தில் வாடகை தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. அதனடிப்படையில் 2022, மார்ச் மாதத்தில் கரு முட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது, மேலும் அக்குழந்தைகள் 2022, அக்டோபர் 9ஆம் தேதி தம்பதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு நோட்டீஸ்:
தம்பதி, மருத்துவமனை, சிகிச்சை அளித்த மருத்துவர், வாடகைத்தாய்க்கு பேறு கால சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் தம்பதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020இல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார்.
அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை நடத்தியபோது அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது எண்கள் உபயோகத்தில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்று விட்டதாக தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை. அத்துடன் சினை முட்டை சிகிச்சை தொடர்பான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை.
ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி மருத்துவமனையில் தம்பதிக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால், இது குறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை.
எனவே, இந்த நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.