இரண்டாவது நாளில் 1500 விமானங்கள் ரத்து... இன்னும் அதிகரிக்க வாய்ப்பு
அமெரிக்காவில் அரசாங்கம் முடக்கப்பட்டுள்ள நிலையில், விமானப் போக்குவரத்தில் இரண்டாவது நாளாக 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்கம் பெரிதாக இல்லை
இதுவரை, நாட்டின் மிகவும் பரபரப்பாக இயங்கும் பல விமான நிலையங்களில், இதன் தாக்கம் பெரிதாக இல்லை என்றே கூறப்படுகிறது. அரசாங்கம் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பயணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாளுக்கு நாள் ரத்தாகும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றால், அதன் தாக்கம் மிக மோசமாக இருக்க வாய்ப்புண்டு என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஏற்கனவே சுற்றுலாவை நம்பியிருக்கும் பல நகரங்கள் இந்த விமானங்கள் ரத்தாகும் நடவடிக்கைகளால் பாதிக்கப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும், FAA நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 37 விமான நிலைய கோபுரங்கள் மற்றும் பிற மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
அட்லாண்டா, நியூவார்க், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ மற்றும் நியூயார்க் உட்பட குறைந்தது 12 முக்கிய அமெரிக்க நகரங்களில் விமானங்கள் தாமதமாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

10 சதவீதத்தை எட்டும்
மொத்தம் 40 விமான நிலையங்களில் இருந்து 4 முதல் 10 சதவீதம் வரையில் விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக FAA தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரத்தாகும் விமானங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தை எட்டும் என்றே குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர் லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய மிகப்பெரிய விமான நிறுவனங்களின் 700 விமானங்கள் வரையில் ரத்து செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை ஒருவழிப் பயண முன்பதிவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வாடகை கார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |