வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு.., சாம்பார் மசாலா என்று சமாளித்த அதிகாரிகள்
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டுகள் கிடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ரயில் உணவில் வண்டுகள்
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில், கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் விரைவாக செல்லலாம் என்ற காரணத்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்தவகையில், சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் திகதி தொடங்கியது. ரயில் பயணத்தின் போது உணவுகள், காபி, டீ, தண்ணீர் பாட்டில், நியூஸ் பேப்பர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அப்போது, சாம்பாரில் வண்டுகள் இருப்பதாக ரயில் பயணிகள் புகார் அளித்துள்ளனர். இதனால், பயணிகளுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தரமான உணவை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கூறியுள்ளனர். அதற்கு, "சாம்பார் மசாலா" என்று அதிகாரிகள் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |