வியட்நாம் பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழர்! உறவினர்கள் புடைசூழ ஜப்பானில் நடந்த திருமணம்
தமிழக மாவட்டம் நெல்லையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், வியட்நாமைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ஜப்பானில் மலர்ந்த காதல்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் வடக்கு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் பிரபு. இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஜப்பானில் பணிபுரிந்து வருகிறார்.
எனினும் பகுதி நேரமாக அங்கு Ph.D பயின்று வரும் தாமஸ் பிரபு, வியட்நாமைச் சேர்ந்த பாஃபா துய் சுக் என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.
நட்பாக பழகிய இருவரும் பின் காதலில் விழுந்தனர். இவர்களின் காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த 12ஆம் திகதி ஜப்பானில் ரோமன் கத்தோலிக்க முறைப்படி திருமணம் நடந்தது.
கூடங்குளத்தில் வரவேற்பு
அதனைத் தொடர்ந்து கூடங்குளத்தில் உள்ள தாமஸ் பிரபுவின் இல்லத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திருமணம் குறித்து மணமகனின் தந்தை செல்வராஜ் கூறுகையில்,
'பண்டைய தமிழ் மன்னர்கள் மீது வியட்நாம் மக்கள் மிகவும் அன்பு செலுத்தியுள்ளார்கள். தமிழ் மண் மீதும் பாசம் வைத்துள்ளார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இருவர் குடும்பமும் சம்மதித்து, எனது மகனுக்கு அவரது விருப்பப்படி திருமணம் செய்து வைத்துள்ளோம்.
திருமணம் ஜப்பானில் நடத்தப்பட்டது. மேலும் உறவினர்களின் விருப்பத்திற்காக இங்கு வரவேற்பு வைத்துள்ளோம். இன்னும் இரு நாட்களில் மீண்டும் மணமக்களை வியட்நாம் சென்று குடி அமர்த்துவோம்' என தெரிவித்துள்ளார்.