டி20யில் 167 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளம் இமாலய வெற்றி
மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நேபாளம் 167 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
ஆசிப் ஷேக் 68 ஓட்டங்கள்
நேபாளம் மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான, ஆசிய டி20 போட்டித் தொடரின் தகுதிச்சுற்று ஆட்டம் சிங்கப்பூரில் நடந்தது.

இதில் முதலில் ஆடிய நேபாள அணியில், ஆசிப் ஷேக் மற்றும் குஷால் புர்டெல் கூட்டணி 52 பந்துகளுக்கு 134 ஓட்டங்கள் குவித்தது.
அரைசதம் அடித்த ஆசிப் ஷேக் 24 பந்துகளில் 68 ஓட்டங்கள் (7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து சந்தீப் 15 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் திபேந்திர சிங் ஐரீ சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
மறுமுனையில், குஷால் புர்டெல் (Kushal Bhurtel) வாணவேடிக்கை காட்ட நேபாள அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அணியின் ஸ்கோர் 231 ஆக இருந்தபோது, திபேந்திர சிங் 11 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 31 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.

குஷால் புர்டெல் சதம்
சதம் விளாசிய குஷால் புர்டெல் 54 பந்துகளில் 126 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும்.
நேபாள அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் குவித்தது. விரன்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், சையத் மற்றும் விஜய் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய மலேசிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ஓட்டங்களே எடுத்தது. இதன்மூலம் நேபாள அணி 167 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அணித்தலைவர் சையத் அஸிஸ் முபாரக் 54 (45) ஓட்டங்களும், ஷர்வின் 18 (25) ஓட்டங்களும் எடுத்தனர். ஷெர் மல்லா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |