நேபாளத்தில் மாயமான பிரித்தானியர்கள்: உறவினர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள செய்தி
Nepal ends search after flash floods disaster with dozens of Britons still missing: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான பிரித்தானியர்களின் நிலை என்ன என்பது தெரியாத நிலையில், மாயமானவர்களைத் தேடும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது அந்நாட்டு அரசு.

புனித யாத்திரைக்காகவும், சுற்றுலாவுக்காகவும் ஏராளமான மக்கள் நேபாளத்துக்குச் சென்றிருந்த நிலையில், நேபாள திபெத் எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம், அவர்களில் பலருடைய நிலைமையை தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டது.
மாயமான பிரித்தானியர்கள்
நேபாளப் பெருவெள்ளத்தின்போது சுமார் 1,445 பேர் கொல்லப்பட்டதாகவும், 5,285 பேரைக் காணவில்லை எனவும் சமீபத்திய தகவல்கள் தெரிவித்திருந்தன.

நேபாளப் பெருவெள்ளத்தின்போது காணாமல் போனவர்களில் 636 பேர் வெளிநாட்டவர்கள். அவர்களில் பிரித்தானியர்கள் 33 பேர்.
ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள செய்தி
தங்கள் உறவினர்கள் நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய விடயம் அவர்களை விட்டு தொலைவில் இருக்கும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய அதே நேரத்தில், அவர்களில் மாயமானவர்கள் நிலை என்ன என்னும் விடயம் கூடுதல் கவலையை உருவாக்கியுள்ளதாக பலரும் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், அவர்களுக்கு ஏமாற்றத்தையளிக்கும் செய்தி ஒன்றை நேபாள அரசு வெளியிட்டுள்ளது.
ஆம், பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களைத் தேடும் பணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ள மீட்புக் குழுவின் தலைவர், அவர்களுடைய உறவினர்கள் காப்பீடு, வங்கி மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சோகம் என்னவென்றால், காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டவர்களில் 112 பேருடைய உடல்கள்தான் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆக, இன்னமும் 1,333 பேருடைய உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்னும் செய்தி, தங்கள் உறவினர்கள் குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளவர்களை இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில்தான் வைத்திருக்கப்போகிறது!