12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன்
டி20 உலகக்கிண்ணப் போட்டியில் நேபாள அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது.
மைக்கேல் ஜோன்ஸ் 71 ஓட்டங்கள்
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில், நேபாளம் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.

முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து அணி 170 ஓட்டங்கள் குவித்தது. மைக்கேல் ஜோன்ஸ் (Michael Jones) 45 பந்துகளில் 71 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 8 பவுண்டரிகள்) விளாசினார்.
சோம்பல் காமி 3 விக்கெட்டுகளும், நந்தன் யாதவ் 2 விக்கெட்டுகளும் , ரோஹித் மற்றும் குஷால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய நேபாள அணியில் குஷால் புர்டெல் 43 ஓட்டங்களும், ஆசிப் ஷேக் 33 ஓட்டங்களும் எடுக்க, அணித்தலைவர் ரோஹித் பௌடல் 16 ஓட்டங்களில் வெளியேறினார்.

எனினும் அதிரடியில் மிரட்டிய திபேந்திர சிங் ஐரி (Dipendra Singh Airee) 23 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் விளாச, நேபாள அணி 19.2 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதல் வெற்றி
12 ஆண்டுகளுக்கு பிறகு நேபாள அணி உலகக்கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், 4 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பெற்றதால் தொடரில் இருந்து வெளியேறியது.

போட்டி குறித்து பேசிய நேபாள அணித்தலைவர் ரோஹித் பௌடல் (Rohit Paudel), "இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன்; எனக்கு மட்டுமல்ல ஒரு அணியாக எங்களுக்கும்தான்.
இந்த தொடர் முழுவதையும் நீங்கள் பார்த்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன். ஆனால், நாங்கள் சூப்பர் 8க்கு தகுதி பெற விரும்பினோம். ஆனாலும், எங்கள் அனைவருக்கும் சிறந்த கற்றல் என்று நான் நினைக்கிறேன், இங்கிருந்து நாங்கள் முன்னேற முயற்சிப்போம்" என தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |