பெண்கள் புரோ ஹாக்கி போட்டி: இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து விலகல்
பெண்கள் புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இருந்து நெதர்லாந்து அணி விலகியுள்ளது.
பெண்களுக்கான புரோ ஹாக்கி லீக் போட்டித் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த சீனாவுக்கு எதிரான 2 ஆட்டங்களில் முறையே இந்திய அணி 7-1, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வருகிற பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்தது. ஆனால் நெதர்லாந்தில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்தியாவில் நடக்க இருந்த போட்டியில் இருந்து நெதர்லாந்து அணி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என நெதர்லாந்து ஹாக்கி சங்க மருத்துவ கமிட்டி அளித்த அறிவுரையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெதர்லாந்து அணியின் விலகல் முடிவு ஆச்சரியம் அளிப்பதாக இந்திய ஹாக்கி சங்க தலைவர் ஞானேந்திர நிங்கோபாம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு குறைவாகவே இருக்கிறது.
இதனால் புவனேஸ்வரில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு 16 அணிகள் பங்கேற்ற ஜூனியர் உலக கோப்பை போட்டியை பயோ-பபுள் நடைமுறைப்படி வெற்றிகரமாக நடத்தியது போல் இந்த போட்டியையும் நடத்த முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம் என தெரிவித்துள்ளார்.