இறுதிப் போட்டியிலும் மைக்கேல் லெவிட் அசுர ஆட்டம்! முத்தரப்பு தொடரை வென்ற நெதர்லாந்து
நேபாளத்தில் நடந்த முத்தரப்பு டி20 தொடரில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது.
நேபாளம் 184
நேபாளம், நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதிய முத்தரப்பு டி20 தொடர் நேபாளத்தில் நடந்தது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து - நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வென்ற நேபாளம் அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. தொடக்க வீரர் குஷால் புர்டெல் 20 (10) ஓட்டங்கள் எடுத்த நிலையில் வான் டெர் குக்டேன் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் ரோஹித் பௌடெல், தொடக்க வீரர் ஆசிஃப் ஷெய்க் உடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த கூட்டணி 59 ஓட்டங்கள் குவித்தது.
ரோஹித் 19 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 47 ஓட்டங்கள் குவித்த ஆசிஃப் lbw முறையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த குல்சன் ஜா 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 பந்துகளில் 34 ஓட்டங்களும், குஷால் மல்லா 11 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 26 ஓட்டங்களும் விளாச நேபாள அணி 184 ஓட்டங்கள் குவித்தது. ஃபிரெட் கிளாசன், வான் டெர் குக்டென், மைக்கேல் லெவிட் மற்றும் ஏங்கெல்பிரட் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
மைக்கேல் லெவிட் ருத்ர தாண்டவம்
அதனைத் தொடர்ந்து துடுப்பாடிய நெதர்லாந்து அணியில், மேக்ஸ் ஓ டௌட் 23 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் ருத்ர தாண்டவம் ஆடிய மைக்கேல் லெவிட், 29 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
அடுத்து விக்ரம்ஜித் சிங் 23 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 29 ஓட்டங்கள் விளாசினார். சைபிரான்ட் ஏங்கெல்பிரட் அதிரடியில் மிரட்ட, மறுபுறம் கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரது விக்கெட்டை தொடர்ந்து, குஷால் மல்லா பந்துவீச்சில் ஏங்கெல்பிரட் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் நெதர்லாந்தின் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கரண் கேசி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் வான் டெர் மெர்வ் ஒரு ரன் எடுத்தார்.
அடுத்த பந்தை எதிர்கொண்ட வான் டெர் குக்டென் பவுண்டரி விளாசி, அதற்கு அடுத்த பந்தில் சிக்ஸர் அடிக்க, நெதர்லாந்து அணி 189 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் முத்தரப்பு தொடரையும் கைப்பற்றியது.
Netherlands' victory lap.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 5, 2024
- Nepal fans cheering and applauding them in numbers. ?pic.twitter.com/uc8ch0XO52
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |