FDA ஒப்புதல் பெற்ற எலான் மஸ்க்கின் Neuralink - மனித மூளை சிப் பரிசோதனையின் முக்கிய கட்டம் தொடக்கம்
Elon Musk's Neuralink Wins FDA Nod for Key Brain Chip Trial: எலான் மஸ்க்கின் Neuralink FDA ஒப்புதல் பெற்றது.
FDA அனுமதி
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் நிறுவிய Neuralink நிறுவனத்திற்கு, மூளையில் பொருத்தப்படும் கணினி-இணைப்பு (Brain-Computer Interface) சாதனத்தின் முக்கிய இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை தொடங்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான FDA அனுமதி வழங்கியுள்ளது.
இது Neuralink நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

நோயாளிகள் பதிவு
Neuralink நிறுவனம் நவம்பர் 25 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, LINK Pivotal Study எனப்படும் இந்த ஆய்வு, ALS (Amyotrophic Lateral Sclerosis) நோயால் கடுமையான உடல் செயலிழப்பை சந்திக்கும் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது இந்த ஆய்வில் பங்கேற்க நோயாளிகள் பதிவு செய்யப்படுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு
இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், நோயாளிகள் தங்களது எண்ணங்களின் மூலம் மட்டுமே கணினி, மொபைல் போன் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை கட்டுப்படுத்த முடியுமா என்பதை பரிசோதிப்பதாகும். மேலும், இந்த மூளை சிப் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படுகிறதா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்ய உள்ளனர்.
Neuralink உருவாக்கியுள்ள இந்த சாதனம், ஒரு நாணயத்தின் அளவிலான சிறிய சிப்பாகும். இது தலையின் எலும்புக்குள் பொருத்தப்படுகிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மிக மெல்லிய நூல்கள், மூளையின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதிகளில் இருந்து நரம்பு சிக்னல்களை பதிவு செய்கின்றன. பின்னர், மென்பொருள் அவற்றை கணினி கட்டளைகளாக மாற்றுகிறது.
இதுவரை அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆரம்பகட்ட பரிசோதனைகளில் 30-க்கும் மேற்பட்டோருக்கு இந்த சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் படிப்பு, தகவல் பரிமாற்றம், வீடியோ கேம்கள் விளையாடுதல் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளுதல் போன்ற செயல்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். ALS நோயாளியான Bradford Smith தனது மூளை சிக்னல்கள் மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு எலான் மஸ்க் இணைந்து தொடங்கிய Neuralink, 2023-ல் மனிதர்களில் சோதனை நடத்த FDA அனுமதி பெற்றது. 2024 ஜனவரியில் முதல் நோயாளியான Noland Arbaugh-க்கு சிப் பொருத்தப்பட்டது.
இந்த புதிய இறுதிக்கட்ட பரிசோதனை வெற்றியடைந்தால், மனித எண்ணங்களை நேரடியாக டிஜிட்டல் சாதனங்களுடன் இணைக்கும் தொழில்நுட்பம் மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |