இளவரசர் பிலிப்பின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயம் வெளியீடு!
மறைந்த எடின்பர்க் டியூக், இளவரசர் பிலிப்பின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய ஸ்பெஷல் எடிஷன் £5 இன்று வெளியிடப்பட்டது.
ஏப்ரல் மாதம் 99 வயதில் இறந்த இளவரசர் பிலிப்பின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய கருவூலம் (Britain’s Treasury) புதிய சிறப்பு பதிப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளது.
இந்த 5 பவுண்டு நாணயத்தின் வடிவமைப்பை 2008-ஆம் ஆண்டு இளவரசர் பிலிப் ஒப்புதல் அளித்ததாக கருவூலம் கூறியது. இதில் கலைஞரான இயன் ரேங்க்-பிராட்லி (Ian Rank-Broadley) வரைந்த பிலிப்பின் அசல் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. நாயாயத்தில் பிலிப்பின் உருவப்படத்துடன் "HRH The Prince Philip, Duke of Edinburgh 1921-2021" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் பிலிப் ஒரு சிறப்பான கடற்படை வாழ்க்கையைக் கொண்டிருந்ததால், பிரித்தானியாவின் ஆயுதப்படை தினமான இன்று இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது.
இந்த நாணயம் ராயல் மிண்ட் வலைத்தளத்திலிருந்தும், இங்கிலாந்தைச் சுற்றியுள்ள தபால் நிலையங்களிலிருந்தும், காமன்வெல்த் மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறப்பு பங்குதாரர்களிடமிருந்தும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த நாணயம் எடின்பர்க் டியூக்கிற்கு ஒரு பொருத்தமான அஞ்சலி ஆகும், அவர் உலகெங்கிலும் உள்ள பல மக்களை ஊக்கப்படுத்தினார் மற்றும் தேசத்துக்கும் அவரது கம்பீரமான ராணிக்கும் தனது பல தசாப்த கால சேவையை புரிந்தார்," என்று கருவூலத் தலைவர் ரிஷி சுனக் (Rishi Sunak) கூறினார்.