பிரான்ஸில் ஜனவரி முதல் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்!
ஜனவரி 1, புதிய மாதத்தில் பிரான்சில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
முத்திரைகள் விலையேற்றம்
அனைத்துவிதமான முத்திரைகளும் விலையேற்றப்பட்டு, புதிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. சிவப்பு நிற முத்திரைகள் 1.28 யூரோக்களில் இருந்து 1.43 யூரோக்களாகவும், பச்சை நிற முத்திரைகள் 8 சதத்தால் அதிகரித்து 1.16 யூரோக்களுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.
இலவச கருக்கலைப்பு
25 வயதுடைய பெண்களுக்கு மூன்றாம் அல்லது நான்காம் பிள்ளைகளுக்குப் பின்னரே இந்த கருக்கலைப்பு இலவசமாக்கப்படும் எனவும், பெண் ஒருவருக்கு வருடத்துக்கு ஒரு முறை மட்டும் கருக்கலைப்பு இலவசமாக மேற்கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெகிழிகளுக்கு தடை
பழங்கள், மரக்கறிகள் பொதி செய்யப்படும் நெகிழிகளுக்கு (plastic) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலவச தண்ணீர்
உணவகங்கள், அருந்தகங்களில் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மகிழுந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு
- மகிழுந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. CO2/km இற்குள் 128 கிராமுக்கு அதிகமாக மாசு ஏற்படுத்தும் மகிழுந்துகளுக்கு குற்றப்பணம் அறவிடப்படும். குற்றப்பணம் 50 யூரோக்களில் ஆரம்பிக்கின்றது.
- ஒவ்வொரு தனியார் வாகனங்களிலும் அதிகபட்ச பாரமாக 1,800 கிலோ மட்டுமே (வாகனங்களின் பாரத்தை தவிர்த்து) அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக ஏற்றப்படும் ஒவ்வொரு கிலோவுக்கும் 10 யூரோக்கள் குற்றப்பணம் செலுத்த நேரிடும்.
புதிய இரண்டு யூரோ நாணயம்
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு தடவை சுழற்சி முறையில் தலைமை நாடு தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இவ்வருடம் 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு பிரான்ஸ் தலைமையேற்கின்றது. அதை பெருமைப்படுத்தும் வகையில் புதிய 2 யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்துள்ளது.