புதிய கொரோனா கட்டுப்பாடுகள்... சுவிட்சர்லாந்தில் இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு
சுவிஸ் அரசாங்கம் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று பரவல் துவங்கியதிலிருந்து இதுவரை காணாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இன்று கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை சுவிஸ் அரசு வெளியிட உள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள சில மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் நிலைமை மோசமாகத்தான் உள்ளது என்றாலும், முந்தைய கொரோனா அலைகளின்போது நிகழ்ந்தது போல், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை.
ஆகவே, அரசு, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்காது என்றே தோன்றுகிறது. சொல்லப்போனால், சில கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
தனிமைப்படுத்தல்
குறிப்பாக, தனிமைப்படுத்தல் காலகட்டம் குறைக்கப்படுவது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் முதல், பயணம் தொடர்பான தனிமைப்படுத்தல் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டாலும், கொரோனா பரிசோதனையில் யாருக்கெல்லாம் கொரோனா தொற்று இருப்பதாக தெரியவருகிறதோ, அவர்களும், கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும், தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற விதி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.
இந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு காரணமாக, 100,000க்கும் அதிகமானோர், சுவிட்சர்லாந்து முழுவதிலும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்கள். இதனால், உள்கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஊழியர்கள் தட்டுப்பாடு உருவாகத் தொடங்கியுள்ளது.
விளையாட்டு கிளப்கள் மற்றும் உணவகங்கள்
விளையாட்டு கிளப்கள் மற்றும் உணவகங்களில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படாது என சுவிஸ் நிதி அமைச்சரான Ueli Maerer ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
வர்த்தகங்களுக்கு நிதி மற்றும் பிற உதவிகள்
கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகங்களுக்கு பெரிய அளவில் உதவிகள் வழங்கப்படலாம் என்று சுவிட்சர்லாந்தின் NZZ செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
ஆக, இன்றைய அறிவிப்புகள் பெரும்பாலும் நேர்மறையானவையாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.