ஐரோப்பிய ஒன்றியத்தில் வரவிருக்கும் மிகப்பெரிய புதிய மாற்றம்... பிரித்தானியர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்
சில மாதங்களில் அமுலுக்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய விதிகளால், பிரித்தானியர்கள் ஐரோப்பாவிற்குச் செல்வது சிக்கலை ஏற்படுத்தும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அமுலுக்கு வரவிருக்கும் EES திட்டம்
கடவுச்சீட்டு முத்திரைகளுக்குப் பதிலாக, வருகை மற்றும் வெளியேறல்களைக் கண்காணிக்க கைரேகைகள் மற்றும் முக ஸ்கேன்கள் போன்ற பயோமெட்ரிக் தரவை இனி அதிகாரிகள் பயன்படுத்த உள்ளனர்.
இந்த திட்டமானது அமுலுக்கு வந்ததும், முதல்முறையாக பயணிக்கும் பிரித்தானியர்களின் விரல் அடையாளங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்யப்படும். ஆனால் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் அமுலுக்கு வரும் இந்த திட்டத்தால் கடுமையான தாமதங்கள் ஏற்படலாம் என்றே அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, பயணிகளை விமானத்தின் உள்ளேயே தடுத்து நிறுத்த விமான சேவை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சுரங்க பாதையை பயன்படுத்தும் சாரதிகளுக்கும், 5 முதல் 7 நிமிடங்கள் வரையில் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த காத்திருப்பு நேரமானது ஒரு நிமிடத்திற்கும் குறைவாகும். அமுலுக்கு வரவிருக்கும் EES திட்டமானது பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இடையூறுகளைத் தணிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது கடந்த ஆண்டு நவம்பரில் அமுலுக்கு வரவிருந்தது, ஆனால் விமான நிலையங்களில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்ததால் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
முகம் ஸ்கேன் செய்யப்படும்
இந்த தாமதத்திற்கு ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகியவை குறிப்பாக முக்கிய பங்கு வகித்தன. புதிய திட்டத்திற்கு அவர்கள் தயாராக இல்லை என்று கூறின. ஆனால், புதன்கிழமை, ஐரோப்பிய ஒன்றியக் குழு ஒன்று எதிர்வரும் அக்டோபர் மாதத்திலிருந்து இந்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர வாக்களித்தது.
அத்துடன் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த திட்டத்தை 6 மாதங்களுக்குள் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. திட்டம் அமுலுக்கு வந்ததும், உங்கள் கடவுச்சீட்டு ஸ்கேன் செய்யப்பட்டு, கைரேகைகள் மற்றும் புகைப்படத்தையும் பதிவு செய்வதுடன், பயணம் தொடர்பில் நான்கு கேள்விகளும் கேட்கப்பட்டு, பதில் கோரப்படும்.
அதன் பின்னர் ஒவ்வொரு பயணத்தின் போதும், மூன்றாண்டுகளுக்கு அல்லது உங்கள் கடவுச்சீட்டு காலாவதியாகும் வரையில் உங்கள் முகம் ஸ்கேன் செய்யப்படும் அல்லது விரல்ரேகைகள் கோரப்படும்.
விமானப் பயணிகள் என்றால் விமான நிலையத்திலும், யூரோஸ்டார், யூரோடனல் அல்லது படகு மூலம் பயணம் செய்வதாக இருந்தால் பிரித்தானிய மண்ணில் புறப்படுவதற்கு முன் சோதனைகள் செய்யப்படும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் புகைப்படம் எடுக்கப்படும், கைரேகைகள் தேவையில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |