Threadsல் விரைவில் புது வசதி!
உலகம் முழுவதும் மிகப் பிரபலமான சமூக வலைதளம் ட்விட்டர்.
இத்தளத்திற்குப் போட்டியாக, மெட்டா நிறுவனம் திரெட்ஸ் எனும் புதிய செயலியைக் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
இன்ஸ்டாகிராமைத் தழுவி உருவாகி இருக்கும் திரெட்ஸ் செயலியின் பதிவிறக்கங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
திரெட்ஸ் செயலியில் டெக்ஸ்ட் அப்டேட்டுகள், ரிப்ளை, ரி-போஸ்ட், லைக் மற்றும் ஷேர் போன்ற சில அம்சங்கள் தான் வழங்கப்பட்டு உள்ளன.
இருப்பினும், திரெட்ஸ் செயலியில் நேரடியாக குறுந்தகவல் அனுப்பும் வசதி இதுவரையிலும் வழங்கப்படவில்லை. தற்போது, இந்த அம்சம் விரைவில் வழங்கப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் தலைமைச் செயல் அதிகாரியான ஆடம் மொசெரி, திரெட்ஸ் செயலியில் நேரடிக் குறுந்தகவல்களை வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதள ஆய்வாளரான மேட் நவரா தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதில், திரெட்ஸ் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் குறித்து தெரிவித்து உள்ளார்.
அவரது அறிவிப்பில், டிரென்ட்ஸ் & டாபிக்ஸ், இம்ப்ரூவ்டு சர்ச் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கிரியேட்டர்கள் அளிக்கும் கருத்துகளுக்கு ஏற்பவும், சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், மற்ற சமூக வலைதளச் செயலிகளைப் போல, திரெட்ஸ் செயலியிலும் குறுந்தகவல் அனுப்பும் வசதி வேண்டும் எனப் பயனர்கள் கோரிக்கை வைத்திருக்கலாம் என அறியப்படுகிறது.
இருப்பினும், இந்த செயலியில் எப்போது புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. விரைவில் புதிய அம்சங்கள் வரும் எனக் காத்திருக்கும் பயனர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |