கனடாவில் அதிகம் சம்பாதிக்கும் புலம்பெயர்ந்தோர் யார்? ஆய்வு முடிவுகள்
கனடாவில் புதிதாக நிரந்தர வாழிட உரிமம் பெற்ற புலம்பெயர்ந்தோரே அதிகம் பணம் சம்பாதிப்பதாக கனேடிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அந்த ஆய்வில், 2018இல் கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்கள், 2019ஆம் ஆண்டில், சராசரியாக 31,900 கனேடிய டொலர்கள் ஊதியம் பெற்றதும், 1981க்குப் பிறகு, அனைத்துப் பிரிவு புலம்பெயர்ந்தோரிலும் அதிக ஊதியம் பெற்றவர்கள் அவர்கள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
பல பிரிவு புலம்பெயர்ந்த பணியாளர்களில், கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெறும் முன் கனடாவில் கல்வி கற்றவர்களும், கனேடிய பணி அனுபவம் கொண்டவர்களும், நிரந்தர வாழிட உரிமம் பெற்று பணியில் இணைந்து ஒரு ஆண்டிலேயே நல்ல ஊதியம் பெற்றுள்ளார்கள் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
2018இல் கனடாவுக்கு வந்தவர்களில், கனடாவில் கல்வியும் கற்று, கனேடிய பணி அனுபவமும் பெற்றிருந்தவர்கள், அடுத்த ஆண்டிலேயே 44,600 கனேடிய டொலர்களை ஊதியமாகப் பெற்றுள்ளார்கள். விடயம் என்னவென்றால், இந்த தொகை, கனடாவில் பிறந்தவர்கள் வாங்கிய ஊதியத்தைவிட அதிகம் என்பதாகும்.
நிரந்தர வாழிட உரிமம் பெறும் முன் கனேடிய பணி அனுபவம் மட்டும் கொண்டவர்கள், 2019ஆம் ஆண்டில் 39,300 டொலர்கள் ஊதியம் பெற்ற நிலையில், கனடாவில் கல்வி கற்ற அனுபவம் மட்டுமே கொண்டவர்கள், 2019இல் 15,100 டொலர்கள் மட்டுமே ஊதியம் பெற்றுள்ளார்கள்.
இதிலிருந்து, கனடாவில் நல்ல ஊதியம் பெறுவதற்கு, கனேடிய கல்வி மற்றும் பணி அனுபவம் எவ்வளவு அவசியம் என்பது நன்கு புலனாகிறது.