சுவிஸில் 13 மண்டலங்களில் கொரோனா சோதனை தொடர்பில் புதிய முயற்சி
சுவிட்சர்லாந்தின் 13 மண்டலங்களில் பொதுமக்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொரோனா சோதனை மேற்கொள்ள நிர்வாகிகள் தரப்பு முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மண்டல நிர்வாகங்களும் பெடரல் நிர்வாகமும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கமான வெகுஜன கொரோனா சோதனைகளின் செலவுகளை மத்திய அரசு ஈடுகட்டும் என பெடரல் கவுன்சில் புதன்கிழமை அறிவித்தது.
இதனையடுத்து தற்போது 13 மண்டலங்கள் குடியிருப்பாளர்களை நேரடியாக சந்தித்து கொரோனா சோதனை முன்னெடுக்க தயாராகி வருகிறது.
சுவிட்சர்லாந்தில் இத்திட்டத்தை Graubünden மண்டல நிர்வாகமே முதல்முதலாக தொடங்கியது.
முதியோர் இல்லங்கள், பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள் என மொத்தமாக சோதனைக்கு உட்படுத்தினர்.
இதனால் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளையும் கண்டறிய முடியும் என அவர்கள் நிரூபித்துள்ளனர்.
தற்போது இதே பாணியை சூரிச், ஆர்காவ் உள்ளிட்ட மண்டல நிர்வாகமும் முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதுபோன்ற வெகுஜன கொரோனா சோதனைகளுக்கு உதவும் வகையில் Graubünden மண்டல நிர்வாகத்திடம் இதுவரை 14,400 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.