புலம்பெயர்வோர் பணி செய்வதை எளிதாக்கும் புதிய சட்டம்... அறிமுகம் செய்யும் கனேடிய மாகாணம்
புலம்பெயர்வோர் பணி செய்வதை எளிதாக்கும் சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் ஒன்ராறியோ புலம்பெயர்தல் துறையை கவனிக்கும் அமைச்சர்.
ஒன்ராறியோவின் தொழிலாளர் துறை அமைச்சரும் புலம்பெயர்தல் துறையை கவனித்துக்கொள்பவருமான Monte McNaughton, ஒன்ராறியோ மாகாணத்தை பணி செய்வதற்கு மேலும் உகந்த மாகாணமாக மாற்றும் வகையில், அல்லது வெளிநாட்டுப் பணியாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், அதாவது அக்டோபர் 25ஆம் திகதி, அவர் பணியார்களுக்காக பணி செய்யும் சட்டம் (Working for Workers Act) என்ற ஒரு சட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
அந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஒன்ராறியோ பணியாளர்கள் பெரிய மாற்றங்களைக் காணலாம்.
அந்த சட்டம், ஒன்ராறியோவில் முறைப்படுத்தப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்களில் (regulated occupations) பணியாற்ற முயற்சி செய்யும் புலம்பெயர்வோருக்காக சென்ற வாரம் அறிவிக்கப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், புதிதாக கனடாவுக்கு வருவோர், மருத்துவம் அல்லாத பிற துறைகளில் பணி உரிமம் பெறுவதற்கு தடையாக இருக்கும் கனேடிய பணி அனுபவம், மொழித்தேர்வு ஆகியவற்றை நீக்குவதுடன், குறிப்பாக அவசர காலங்களில் உரிமம் பெறுவதை வேகப்படுத்தவும் ஒன்ராறியோ அரசு விரும்புகிறது.
இந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அங்கீகரிக்கப்பட்ட தொழில்களில் கனேடிய பணி அனுபவம் தேவை என்னும் விதியை நீக்கும் முதல் மாகாணமாக ஒன்ராறியோ ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.