2023ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் அறிமுகமாகும் புதிய சட்டங்கள்
2023 ஜனவரி 1ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் பல புதிய சட்டங்கள் அமுலுக்கு வருகின்றன.
அவற்றில் முக்கியமான சில சட்டங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஏர்லைன்ஸ்: தங்கள் உடைமைகள் தவறினாலோ, கால தாமதமாக வந்து சேர்ந்தாலோ, விமானப்பயணிகள் கோரும் இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 1,520 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்தது, தற்போது 1,640 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாரிசு சட்டம்: பெற்றோர் தங்கள் சொத்தில் முக்கால் பாகத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும் என்றிருந்த நிலை மாறி, பாதி கொடுத்தால் போதும் என தற்போது சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிள்ளைகள் பெற்றோருக்கு இவ்வளவு சொத்து கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணவன், மனைவி சொத்து விடயங்களில் மாற்றம் எதுவும் இல்லை.
ட்ரோன்கள்: ட்ரோன்கள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாடுகள் இனி சுவிட்சர்லாந்துக்கும் பொருந்தும்.
தத்தெடுத்தல்: தத்தெடுக்கும் பெற்றோர் வேலைக்கு செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் நான்கு வயதுக்கு குறைவான குழந்தையை தத்தெடுத்தால், அவர்களுக்கு இரண்டு வார விடுப்பு கொடுக்கப்பட உள்ளது.
முதலீடு செய்வோர் பாதுகாப்பு: வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும், தங்கள் தயாரிப்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும்போது, அடிப்படை தகவல்கள் குறித்த தகவல்களை தயாரித்து அவர்களுக்கு அளிக்கவேண்டும்.
கோவிட்: இனி கோவிட் பரிசோதனை செய்துகொள்வோர் தாங்களே அதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டும். கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் கட்டணம் செலுத்தும்.
தாவர பாதுகாப்பு: அபாயத்தை ஏற்படுத்தும் பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் கிருமிநாசினிகளை பயன்படுத்த இனி அனுமதி இல்லை.
தீவிரவாதம்: வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களை இனி தனி நபர்கள் வாங்குவது கடினம்.
VAT: இனி 250,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு குறைவான நிதி திரட்டும் தொண்டு நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் VAT செலுத்தவேண்டியதில்லை.