அசுரவேட்டையாடிய லக்னோ.. சரித்திர சாதனை படைத்த கே.எல்.ராகுல்-டி காக்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் எடுத்த இணை என்ற சரித்திர சாதனையை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கே.எல்.ராகுல்-டி காக் படைத்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 8 வெற்றிகள் பெற்றதன் மூலம் ஏறக்குறைய பிளேஆப் சுற்றை உறுதி செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் தனது கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நேற்று மோதியது.
முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய லக்னோ அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் டி காக் கொல்கத்தாவின் பந்துவீச்சை சிதறடித்தனர். குறிப்பாக டி காக் ருத்ரதாண்டவம் ஆடினார். நாலாப்புறமும் பந்துகளை பறக்க விட்ட அவர் சதம் விளாசினார்.
அவருக்கு உறுதுணையாக பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்தார். கடைசி வரை இந்த இணையை கொல்கத்தாவால் பிரிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்த இணை 210 ஓட்டங்கள் குவித்தது. டி காக் 70 பந்துகளில் 10 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 140 ஓட்டங்களும், கே.எல்.றாகும் 51 பந்துகளில் 4 சிக்ஸர்,3 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு ஒரு இணை 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதன் மூலம் கே.எல்.ராகுல்-டி காக் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு முன்பு, 2019ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ்-டேவிட் வார்னர் இணை 185 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 2017ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் விளையாடிய கிறிஸ் லின் மற்றும் கவுதம் காம்பீர் இணை 183 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்கு குவித்திருந்தது.