தடுப்பூசி பெறாதவர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள்: ஜேர்மன் தலைநகர் திட்டம்
ஜேர்மன் தலைநகர் பெர்லின், தடுப்பூசி பெறாதவர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது.
பெர்லினில் கடந்த மூன்று வாரங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று இரட்டிப்பானதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை செனேட் கூடிய நிலையில், இந்த திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
பெர்லின் நகர சுகாதாரத்துறை செனேட்டரான Dilek Kalayci கூறும்போது, 2G திட்டம் தயாராகிவருகிறது என்றார்.
உணவு சமைத்து விற்பனை செய்யும் துறை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் 2G விதிகளை, அதாவது, தடுப்பூசி பெற்றோர் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டோரை மட்டும் அனுமதிக்கும் விதிகள் கொண்டுவரப்பட உள்ளன.
இந்த விதிகள் பொதுப்போக்குவரத்து, சூப்பர்மார்க்கெட்கள் மற்றும் அன்றாட வாழ்வுக்கு அத்தியாவசியமான கடைகளுக்குப் பொருந்தாது.
இதுபோக, 2G-plus என்னும் விதியையும் கொண்டு வரும் ஒரு திட்டமும் உள்ளது. அதாவது, அந்த விதியின்படி, தடுப்பூசி பெற்றோர் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டோரும், கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டியிருக்கும். ஆனால், தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில்தான் இந்த விதியைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்ற எண்ணிக்கை பெர்லினில் 195ஆக உள்ளது.
அத்துடன், பெர்லினிலுள்ள மருத்துவமனைகளில் அமைந்துள்ள தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் 11 சதவிகிதத்திற்கும் அதிகம் கொரோனா நோயாளிகளால் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.