பிரித்தானியா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்... பிரான்ஸ் நிராகரிப்பு: விடாது தொடரும் பிரெக்சிட் பிரச்சினைகள்
மீன் பிடி உரிமம் தொடர்பில் பிரித்தானியா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை நிராகரிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. Channel தீவுகள் பகுதியில் மீன் பிடிக்க உரிமம் வழங்குவது தொடர்பாக பிரித்தானியா புதிய தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆனால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து ஜனவரி 1 அன்று இரு நாடுகளும் மீன் பிடித்தல் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தாங்கள் மிகச்சரியாக கடைப்பிடிப்பதாகவும், அதற்குப் பிறகு கட்டுப்பாடுகள் ஏதாவது விதிக்கப்படுமானால், அவை ஐரோப்பிய ஒன்றியம் வழியாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டாலன்றி அவை செல்லுபடியாகாது என்றும் பிரான்ஸ் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று, படகுகளை கண்காணிக்கும் தொழில்நுட்பம் கொண்ட 41 மீன் பிடி படகுகளுக்கு Jersey தீவு பகுதியில் மீன் பிடிக்க பிரித்தானியா அங்கீகாரம் அளித்தது. அத்துடன், புதிதாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
ஆனால், அவை குறித்து பிரான்சுடன் பிரித்தானியா கலந்தாலோசிக்கவில்லை என்றும், அவை குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் பிரான்ஸ் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானியா விதித்துள்ள அந்த புதிய கட்டுப்பாடுகள், எங்கெல்லாம் பிரான்ஸ் மீன் பிடிப் படகுகள் செல்லலாம், எங்கு செல்லக்கூடாது, கடலில் எத்தனை நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்கலாம், அவர்கள் படகுகளில் என்னென்ன இயந்திரங்கள் வைத்திருக்கலாம் என்பது குறித்தெல்லாம் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க தங்கள் படகுகள் சிலவற்றிற்கே உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, பிரெஞ்சு மீனவர்கள் சென்ற மாதம் போராட்டம் ஒன்றைத் துவக்கினார்கள்.
அதன்படி, பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு மீன்களைக் கொண்டுவரும்
ட்ரக்குகள் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.