சுவிட்சர்லாந்தில் நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான புதிய விதிகள் நாளை முதல் அமுலுக்கு வருகிறது.
ஜூன் 26 முதல் பலவிதமான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
ஜூன் 26 முதல், தனியார் இடங்களில் உட்புறம் நடைபெறும் நிகழ்வுகளில் 30 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தனியார் இடங்களில் வெளிப்புறம் நடைபெறும் நிகழ்வுகளில் 50 பேர் வரை கலந்துகொள்ளலாம்.
மண்டபம் அல்லது உணவகம் போன்ற பொது இடங்களில் திருமணம் நடந்தால், உட்புறங்களில் அதிகபட்சம் 250 விருந்தினர்கள், வெளிப்புறங்களில் 500 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
எனினும், திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடனமாட அனுமதியில்லை.
கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையின் முக்கிய அம்சமாக சுவிஸ் ‘கிரீன் பாஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த திட்டத்தின் கீழ், தடுப்பூசி போடப்பட்டவர்கள், கொரோனா இல்லை என்ற சோதனை முடிவு வைத்திருப்பவர்கள் மற்றும் வைரஸிலிருந்து மீண்டவர்களுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் இரவு விடுதிகளில் கலந்துகொள்ள எந்தவித கட்டுப்பாடோ தடையோ இருக்காது.
சரியான கொரோனா சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி என்ற கட்டுப்பாடுடன் நடக்கும் திருமண நிகழ்வுகளில், எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளவும் நடனமாடவும் சுவிஸ் அரசு அனுமதி அளித்துள்ளது.