தடுப்பூசிகள் குறித்த குழப்பத்துக்கு முடிவு?: புதிய ஆய்வின் முடிவுகள் அளித்துள்ள நம்பிக்கை
விரைவில் வெளியிடப்படவிருக்கும் ஆய்வு ஒன்றின் முடிவுகளில், பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய இரண்டு நிறுவனத்தின் தடுப்பூசிகளுமே கொரோனாவை குறிப்பிடத்தக்க அளவுக்கு தடுப்பதாக தெரியவந்துள்ள விடயம், நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.
பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே, 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64 சதவிகிதத்தினருக்கும், வயதுவந்தவர்களில் 65 சதவிகிதத்தினருக்கும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படும்போது, அதுவே அனைத்து வயதினருக்கும் கொரோனாவிலிருந்து 79 முதல் 84 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பதாக தெரியவந்துள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியிலும் இதே விளைவுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு முடிவுகளின்படி தடுப்பூசிகள் நல்ல பலனளிக்கும் பட்சத்தில் பொதுமுடக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், இந்த செய்தி பொதுமக்களுக்கு மட்டுமின்றி, பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டிவருமோ என்ற எண்ணத்திலிருந்த அரசியல்வாதிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

