ட்ரம்ப் கிரிப்டோகரன்சி... சில மணிநேரங்களில் புதிய உச்சம்: மிரண்டு போன கிரிப்டோ சந்தை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள $Trump என்ற கிரிப்டோகரன்சி புதிய சாதனை உச்சம் தொட்டதுடன் ஒட்டுமொத்த கிர்ப்டோ சந்தையையும் மிரள வைத்துள்ளது.
ட்ரம்ப் மீம் காயின்
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ஜனவ்ரி 20ம் திகதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வரவிருக்கிறார். இந்த நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் புதிய மீம் கிரிப்டோ காயின் தொடர்பான அறிவிப்பை தனது சொந்த சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப் வெளியிட்டார்.
அத்துடன் எங்கே வாங்கலாம் என்ற இணைப்பினையும் அதில் பதிவு செய்தார். அதில், எனது புதிய உத்தியோகப்பூர்வ ட்ரம்ப் மீம் காயின் வந்துவிட்டது. எங்களுக்கு ஆதரவாக நின்ற அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம் இது. வெற்றியைக் கொண்டாடுவோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, $Trump காயின் சந்தையில் அறிமுகமான சில மணி நேரத்திலேயே இதன் மதிப்பு 220 சதவீதம் உயர்ந்து, 4.25 பில்லியன் டொலர்களை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோலானா நெட்வொர்க்கில் வெளியிடப்பட்ட இந்த நாணயத்தின் வர்த்தகம் தொடக்கத்தில் சுமார் 1 பில்லியன் டொலர் வரை எட்டியது. அறிமுகம் செய்யப்பட்ட போது ஒரு காயின் மதிப்பு 0.18 டொலராக மட்டுமே இருந்தது.
ஆனால், பலரும் இதை வாங்க ஆர்வம் காட்டவே இதன் மதிப்பு மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 7.10 டொலர் வரை சென்றது. தொடக்கத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்களே இதை அதிகளவில் வாங்கியுள்ளனர்.
72 டொலர் என வர்த்தகம்
தற்போது ஒரு $Trump காயின் மதிப்பு 72 டொலர் என வர்த்தகம் செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 100 கோடி $Trump காயின் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக தற்போது 20 கோடி காயின்களை விற்பனைக்கு என வெளியிட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள 80 கோடி காயின்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு கட்டமாக விற்பனைக்கு விடவும் முடிவு செய்துள்ளனர்.
ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றவுடன் 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கிரிப்டோ ஆலோசனைக் குழுவை உருவாக்குவதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பிப்பதாக ஏற்கனவே அவர் உறுதியளித்துள்ளார்.
தற்போது ட்ரம்ப் வெளியிடப்பட்டுள்ள ஒற்றை காயினால் வர்த்தகர்களின் கவனம் மொத்தம் இதன் மீது திரும்பியுள்ளதால் இந்த வகை மொத்த கிரிப்டோ காயினும் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |