தடுப்பூசிக்கு கட்டுப்படாத கொரோனா வைரஸ்! பிரித்தானிய அறிவியல் ஆலோசனைக்குழு வெளியிட்ட அதிமுக்கிய தகவல்
உலகில் ஆயிரக்கணக்கான திடீர் மாற்றம் பெற்ற வைரஸ்கள் இருக்கின்றன, அதனால் புதிதாக ஒரு வைரஸ் வந்ததும் பயப்படாதீர்கள் என பிரித்தானிய அறிவியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ் ஒன்று ஐரோப்பாவில் பரவிவருவதாக கருதப்படும் நிலையில், அது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத ஒன்று என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இப்படி ஒரு வைரஸ் புதிதாக உருவாகியுள்ளது என அறிவியலாளர்கள் அரசை எச்சரித்துள்ளதால், விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் திட்டத்தை அமுல்படுத்த முடியுமா என்ற ஒரு சந்தேகம் அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், உலகில் ஆயிரக்கணக்கான திடீர் மாற்றம் பெற்ற வைரஸ்கள் இருக்கின்றன, அதுவும் இந்த வைரஸ் மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால் அதைக் குறித்து அதிகமாக கவலைப்படவேண்டாம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த Baroness Ruby McGregor-Smith கூறும்போது, இன்னும் எத்தனை திடீர் மாற்றம் பெற்ற வைரஸ்களைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டியிருக்கும்? நம்மைப் பொருத்தவரை தரவுகளும், நமது தடுப்பூசி திட்டத்தின் வெற்றியும்தான் நாம் அக்கறை காட்டவேண்டிய விடயங்கள் என்று கூறியுள்ளார்.
இன்று, பிரித்தானியா, தன் குடிமக்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி சுற்றுலா சென்றுவரக்கூடிய ‘பச்சை நாடுகள்’ பட்டியலை புதுப்பிக்க உள்ள நிலையில், நேபாள வைரஸ் குறித்த அச்சம் காரணமாகவும், ஐரோப்பாவில் தடுப்பூசித் திட்டம் மெதுவாகவே நிறைவேற்றப்பட்டு வருவதன் காரணமாகவும், பட்டியலில் புதிதாக சேர்க்கப்படும் நாடுகள் மிகக் குறைவாகவே இருக்கும் என அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய நேபாள வைரஸ் போர்ச்சுகல்லில் காணப்படலாம் என்பதால், போர்ச்சுகல் பச்சை நாடுகள் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி, ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்துத் தொழில் துறைக்கு மற்றொரு அடியாக அமைந்துள்ளது.
அப்படி இந்த கட்டுப்பாடுகளால் இந்த கோடை சீஸன் பாதிக்கப்படுமானால், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும், பிரித்தானிய பொருளாதாரத்தில் பல பில்லியன்கள் அளவுக்கு இழப்பு நேரிடும் என்றும், போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எச்சரித்துள்ளனர்.