2022 உலகக் கோப்பையிலிருந்து நியூசிலாந்து விலகல்!
2022 ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து விலகியுள்ளது.
வீரர்கள் நாடு திரும்பும்போது அவர்களுக்கு விரிவான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் காரணமாக 2022 ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக ஸ்காட்லாந்து அணி ஐரோப்பா தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தகுதிபெறத் தவறியது குறிப்பிடத்தக்கது.
2022 ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கரீபியனில் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெறவுள்ளது. இதில், 16 அணிகள் நான்கு குழுக்களாக போட்டியிடுகின்றன.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் ஒரு முறையும், ஆஸ்திரேலியா மூன்று முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்க தேசம் தலா ஒரு முறையும் வென்றுள்ளன. இந்தியா நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.