படுமோசமாக தோற்ற இந்தியா! 8 விக்கட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மிக முக்கிய போட்டியாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுபவர்களுக்கு தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும் என்ற சூழல் இருந்தது.
தொடக்கத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மிகப்பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இஷான் கிஷான் மற்றும் கே.எல்.ராகுல் ஓப்பனிங்கிற்கு களமிறங்கினர். ரோகித் முதல் விக்கெட்டிற்கும், விராட் கோலி 4-வது வீரராகவும் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாற்றங்கள் ஏமாற்றத்தை தந்தது தான் மிச்சம்.
கே.எல்.ராகுல் 18 ஓட்டங்களுக்கும், இஷான் கிஷான் 4 ஓட்டங்களுக்கும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதன் பின்னர் வந்த சீனியர் வீரர்களாவது சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
நிதானமாக ஆடத்தொடங்கிய கேப்டன் விராட் கோலி 17 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். துணைக் கேப்டன் ரோகித் சர்மா 14 ஓட்டங்களுக்கு அவரும் வெளியேறினார்.
நிலைமை மிக மோசமானது, அடுத்து வந்த ரிஷப் பண்ட் 12 ஓட்டங்க்ளும், ஹர்திக் பாண்ட்யா 23 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். இதனால் 97 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து இந்திய அணி பரிதாப நிலைக்கு சென்றது.
இன்னும் சோகம் என்னவென்றால் மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. கடைசி வரை நியூசிலாந்து அணி சிறப்பாக பந்துவீச, 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்களும், இஷ் சவுத்தி 2 விக்கெட்கள் மற்றும் டிம் சவுத்தி, ஆடம் மில்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, 111 அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய நியூசிலாந்து அணி, பந்துவீச்சை போன்று துடுப்பாட்டத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஈசியாக எண்ணிக்கையை குவித்தது.
இதன் மூலம் 14.3 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிட்செல் 49 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 33* ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்தியாவின் தோவிக்கு, பேட்டிங் வரிசையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், 2007 டி20, 2016 டி20, 2019 50 ஓவர் அரையிறுதி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 டி20 என தொடர்ந்து முக்கியமான 5 ஐசிசி போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.