பிரித்தானியாவில் நிறைமாத கர்ப்பிணி மீது மோதிய கார்... பின்னர் நடந்த துயரம்: கைதான 6 பேர்கள்
பிரித்தானியாவில் லங்காஷயர் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை மரணமடைந்ததுடன், அதன் தாயார் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் குழந்தை
குறித்த விவகாரத்தில் 6 பேர்கள் கைதாகியுள்ளனர். லங்காஷயர் பொலிசார் தெரிவித்த தகவலில், 30 வயது கடந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கடந்த ஞாயிறன்று பாம்பர் பிரிட்ஜ் கிராமத்தில் பாதசாரிகள் கடக்கும் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது கார் ஒன்று மோதியுள்ளது. உடனடியாக அவர் சம்பவயிடத்தில் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆனால் குறித்த குழந்தையானது சிறிது நேரத்தில் மரணமடைந்துள்ளது. அந்த தாயார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரத்தில் தற்போது Lostock Hall பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, Bolton பகுதியை சேர்ந்த 19 வயது ஆண், Blackburn பகுதியை சேர்ந்த 40 வயது நபர் என கைதாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போதும் பொலிஸ் காவலில் உள்ளனர். அத்துடன் 15 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள், 53 வயது நபர் ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உதவ முன்வர வேண்டும்
விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஒரு பிஞ்சு குழந்தையின் மரணத்திற்கு காரணமான மிக மோசமான சம்பவம், அத்துடன் அவரது தாயாரை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் விட்டுச் சென்றுள்ளனர் என்றார்.
விசாரணை சிறப்பாக நடந்து வருவதாகவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய அந்த வாகனமானது அடர் சாம்பல் நிற டொயோட்டா ப்ரியஸ் எனவும். பதிவு இலக்கம் FY62 MXC எனவும், பொலிசார் தற்போது இந்த வாகனத்தை கண்டுபிடிக்க முயன்று வருவதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |