பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை கட்டுப்படுத்த புதிதாக அறிமுகமாக இருக்கும் மின்னணு திட்டம்
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய திட்டம் ஒன்றை உள்துறை அலுவலகமும் அமைச்சர்களும் முன்வைத்துள்ளார்கள்.
அதன்படி, ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் கால்வைத்ததும், வேலை செய்யும் வயதிலிருக்கும் புலம்பெயர்ந்தோரின் கால்களில், அவர்களைக் கண்காணிப்பதற்கு வசதியாக, மின்னணுப் பட்டை (electronic tag) ஒன்று அணிவிக்கப்பட உள்ளது.
பிரித்தானியாவில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதாக நம்பப்படுகிறது. அவர்களால் கருப்புச் சந்தை வளர்வதாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.
இந்த மின்னணுப்பட்டை திட்டம் அவர்களை கண்காணிக்க குறைந்த செலவில், அதிக திறனுடன் செயல்படும் திட்டம் என்கிறார்கள் உள்துறை அலுவலக அலுவலர்கள்.
சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைவது தண்டனைக்குரிய குற்றம் இல்லைதான். ஆனால், அவர்களுக்கு பிரித்தானியாவில் வாழ உரிமை இல்லாத நிலையில், அவர்களை எளிதாகவும் விரைவாகவும் நாடுகடத்த இந்த மின்னணு பட்டை உதவும் என்கிறார்கள் அவர்கள்.
இதனால், கருப்புச் சந்தை கட்டுப்படுவதுடன், புலம்பெயர்வோர் உயிருக்கு ஆபத்தான வகையில் படகுகளில் பிரித்தானியாவை நோக்கி பயணிப்பதும் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர்களும் தெரிவித்துள்ளார்கள்.