ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி குறித்து வெளியாகியுள்ள மற்றுமொரு ஏமாற்றமளிக்கும் செய்தி
ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பு மருந்து இரத்தக்கட்டிகளை உருவாக்குவதாக வெளியான செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு ஏமாற்றமளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயது முதிர்ந்த பிரித்தானியர்கள் உடலில், பைசர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் உடலில் உருவாகுவதைவிட குறைந்த அளவிலேயே ஆன்டிபாடிகள் உருவாகுவதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
லண்டன் இம்பீரியல் கல்லூரி நிபுணர்கள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடலில் 85 சதவிகிதம் அளவுக்கே கொரோனாவை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் உருவாகுவதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
அதே நேரத்தில், பைசர் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடலில் 98 சதவிகிதம் ஆன்டிபாடிகள் உருவாகுவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆன்டிபாடிகள் என்பவை கொரோனாவுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு பாகம் மட்டுமே என்றாலும், இந்த கண்டுபிடிப்பு தங்களை ஆச்சரியப்படுத்தவில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
வலுவிழக்கச் செய்யப்பட்ட, ஜலதோஷத்தை உண்டாக்கும் ஒரு வைரஸின் அடிப்படையில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி உருவாக்கப்படுவதே இதற்கு காரணம் என்கிறார் வைரஸ் துறை நிபுணரான Ian Jones. இன்னொரு பக்கம், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி, அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்றை தடுப்பதிலும் சற்று வலிமையற்றதாகவே இருப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஆனாலும், மருத்துவமனைகளில் நோயாளிகளை ஆராயும் real-world analysis முறையில் பார்த்தால், இரண்டு தடுப்பூசிகளுமே கடுமையான கொரோனா தொற்றையும் மரணத்தையும் திறம்பட தடுப்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.