பிரான்சில் வாழும் பிரித்தானியர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி
பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை மாற்றுவது தொடர்பில் இரு நாடுகளும் செய்யவிருக்கும் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் வாழும் பிரித்தனியர்கள் பிரெஞ்சு மொழி தேர்வை எழுதாமலே தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமங்களை பிரான்ஸ் ஓட்டுநர் உரிமங்களாக மாற்றிக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை செய்யவிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு, அந்த ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
பிரெக்சிட்டுக்குப் பின் இது தொடர்பாக சரியான ஒப்பந்தம் ஒன்று இல்லாததால் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை பிரான்ஸ் ஓட்டுநர் உரிமங்களாக மாற்ற இயலாமல் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் தவித்துவந்த நிலையில், சிலர் தங்கள் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகிவிட்டதால் வாகனம் ஓட்ட இயலாமல் அவதியுற்றுவந்தனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், பாரீஸிலுள்ள பிரித்தானிய தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், தற்போது பிரித்தானிய ஓட்டுநர் உரிமங்களை பிரான்ஸ் ஓட்டுநர் உரிமங்களாக மாற்றிக்கொள்ளும் வகையில் ஒரு ஒப்பந்தம் செய்யப்படு வருவதாகவும், அந்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், விரைவில் அதுகுறித்த அறிபிப்பை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த ஒப்பந்தத்தால் தங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிரித்தானியர்களுக்கு பயனேதும் இல்லை.
அந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவும், பிரான்ஸ் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், கூடுமானவரை விரைவாக அது குறித்த அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.