சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு அடுத்த அடி: சாலையில் இறங்கி நடவடிக்கையில் ஈடுபடத்துவங்கியுள்ள அதிகாரிகள்
விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தாலும் நாட்டு மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்க, மக்கள் கவனத்தை திசை திருப்புவதுபோல், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது பிரித்தானிய அரசு.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஒழித்துக்கட்டுவது என கங்கணங்கட்டிக்கொண்டு, தற்போது தெருவிலேயே இறங்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.
யாருக்கு உதவுகின்றன பிரித்தானிய ஊடகங்கள்?
சமீப காலமாக, பிரித்தானிய ஊடகங்கள் சில, சட்டவிரோத புலம்பெயர்வோரை சந்தித்து பேட்டிகள் எடுத்துவருகின்றன. ஆரம்பத்தில் அவைகளின் நோக்கத்தைப் பார்த்தால், ஏதோ அவர்களுடைய பரிதாப நிலைமையை வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவுவதுபோலவே இருந்தது.
ஆனால், உண்மையில் அந்த ஊடகங்கள் வெளியிட்ட விவரங்கள், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ளதுபோல் தெரிகிறது.
உதாரணமாக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சின்னச் சின்ன வேலைகள் செய்து பிழைப்பை நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வேலைக்கு வைக்கும் நிறுவனங்களுக்கும், அவர்களுக்கு வீடு வாடகைக்கு விடுவோருக்கும் விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு உயர்த்தியது பிரித்தானிய அரசு.
அடுத்த குறி உணவு டெலிவரி செய்வோர் மீது
இந்நிலையில், உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்திவரும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது அடுத்த குறிவைக்கப்பட்டுள்ளது.
அதற்காக தெருவிலேயே இறங்கி நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.
ஆம், உணவு டெலிவரி செய்வோரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்து, அவர்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என தெரியவந்தால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாகத் இறங்கியுள்ளார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.
அவ்வகையில், வரிசையாக பல சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரித்தானியர்களின் வேலையை இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பறித்துக்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் அதிகாரிகள்.
ஆனால், சட்டப்படி உரிமம் பெற்று உணவு டெலிவரி செய்யும் பிரித்தானியர்கள் பலர், இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரிடம் கூடுதல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பதில் அவர்களை உணவு டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய அனுமதிப்பதாக, பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |