அடுத்த வாரங்கள் கடினமாக இருக்கும்: சுவிஸ் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
Omicron மாறுபாட்டால் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், அடுத்த வாரங்கள் கடினமாக இருக்கும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெர்ன் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் Alain Berset, மருத்துவமனைகள், மாநிலங்கள் மற்றும் பெடரல் அரசு இடையே நல்ல ஒருங்கிணைப்புடன் ஓமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள சுவிட்சர்லாந்து தயாராக வேண்டும் என்றார்.
மருத்துவமனைகளுக்கு ஒரு கடினமான சூழலை உருவாக்க ஓமிக்ரான் தொற்றால் முடியும் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், மாநில நிர்வாகங்கள் மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதியுடன் தயார் நிலையில் இருத்தல் அவசியம் என்றார்.
மேலும், நிகழ்ச்சிகள் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்கவும், அறிகுறிகள் தோன்றினால் தனிமைப்படுத்தவும் குடிமக்களை அமைச்சர் வலியுறுத்தினார். மட்டுமின்றி, தகுதியுடைய மக்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது சுவிட்சர்லாந்தில், ஏறக்குறைய 68% மக்கள் இரண்டாவது தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். மேலும் 32% மக்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து தற்போது கொரோனா தொற்றுநோயின் ஐந்தாவது அலைக்கு உட்பட்டுள்ளது, புதிய தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.