ஊழல் குற்றச்சாட்டில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் விடுதலை!
பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து ஸ்பெயின் நீதிமன்றம் விடுவிதித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு
கடந்த 2009-2013 காலகட்டத்தில் பிரேசிலின் கிளப் அணியான சண்டோசில் நட்சத்திர வீரர் நெய்மர் விளையாடினார்.
அதன் பின்னர் பார்சிலோனா அணிக்கு மாறிய நெய்மர், 2017ஆம் ஆண்டு முதல் பாரிஸ் சையிண்ட் ஜேர்மைன் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.
அவர் சாண்டோஸ் அணியில் இருந்தபோது அவரது விளையாட்டு உரிமைகளில் 40 சதவீதத்தை, பிரேசிலிய விளையாட்டு முதலீட்டு நிறுவனமான டிஐஎஸ் வைத்திருந்தது. ஆனால், அவர் பார்சிலோனாவுக்கு மாறியபோது ஏமாற்றியதாகக் கூறி 2015ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தது.
@AFP Photo
டிஐஎஸ் வாதம்
அதில் பார்சிலோனா மற்றும் பிரேசிலிய கிளப் ஆகியவை அவரது பரிமாற்றத்தின் உண்மையான செலவை மறைக்க ஒத்துழைத்ததாகவும், அதன் மூலம் நெய்மரின் பரிமாற்றத்தில் அதன் சரியான பங்கை ஏமாற்றியதாகவும் கூறியது.
அத்துடன், பார்சிலோனா மற்றும் நெய்மர் இடையே 2011யில் ஒரு பிரத்யேக ஒப்பந்தம் இருப்பது குறித்து தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை எனவும் டிஐஎஸ் வாதிட்டது.
அதனைத் தொடர்ந்து, நெய்மருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் ஆச்சரியமான நடவடிக்கையாக ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட்டனர்.
JOSEP LAGO / AFP
ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணையின் முடிவில் ஸ்பெயின் நீதிமன்றம் நெய்மரை விடுதலை செய்துள்ளது. அத்துடன் பார்சிலோனா எஃப்சி, முன்னாள் கிளப் தலைவர்கள் ஜோசப் மரியா பார்டோமியூ மற்றும் சாண்ட்ரோ ரோசல், சாண்டோஸ் எஃப்சி மற்றும் நெய்மரின் தந்தை ஆகியோரையும் விடுவிக்க முடிவு செய்ததாக அறிக்கையில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.