பிரித்தானியாவில் NHS இரத்த வங்கிகளுக்கு சைபர் தாக்குதல் ஆபத்து... பிரான்ஸை அடுத்து எச்சரிக்கை
NHS blood banks are at risk from cyber hackers, MP warns: NHS இரத்த வங்கிகளுக்கு சைபர் தாக்குதல் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்துள்ளார்.
பிரான்சில் உள்ள மருத்துவ மையங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, NHS இரத்த வங்கிகள் மற்றும் தடுப்பூசி கையிருப்புகள் சைபர் குற்றவாளிகளின் இலக்காக மாறக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இலக்காக மாறக்கூடும்
பாதுகாப்பான தொழில்நுட்பத்திற்கான கூட்டமைப்பின் தலைவரான கிரேம் டவுனி (Graeme Downie), மருத்துவமனைகள் தங்களின் குளிரூட்டும் அமைப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பிரான்சில் உள்ள மூன்று மருத்துவ மையங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக அங்கு வெப்பநிலை மிக உயர்ந்த நிலையை எட்டியதை அடுத்து, பிரித்தானியாவும் இத்தகைய விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் இலக்காக மாறக்கூடும் என்று டவுனி எச்சரித்துள்ளார்.
பிரான்சின் இரத்த சேவை அமைப்பின் மீதான இந்தத் தாக்குதல், எதிரிகளால் உயிர் காக்கும் இரத்த இருப்புக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள குளிரூட்டும் அமைப்புகளுக்குள் ஊடுருவ முடியும் என்பதை நிரூபிக்கிறது என லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
இரத்தம், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வைத்துள்ள NHS குளிர்சாதனப் பெட்டிகள், மொபைல் நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பக் கூறுகள் மூலம் தொலைவிலிருந்து முறைகேடு செய்யப்படக்கூடிய அபாயத்திற்கு உள்ளாகின்றன என்று பாதுகாப்பான தொழில்நுட்பத்திற்கான கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும், NHS அறக்கட்டளைகள் தங்களது இணைக்கப்பட்ட உபகரணங்களை தற்போதே தணிக்கை செய்ய வேண்டும், மேலும் NHS இதுபோன்ற அல்லது இதைவிட மோசமான தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்பாக, இணைக்கப்பட்ட மருத்துவத் தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்புத் தரநிலைகளை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு இரத்த நிறுவனம் (EFS) திங்களன்று வெளியிட்ட ஒரு தகவலில், பிளாஸ்மா சேமித்து வைக்கப்படும் அதன் மூன்று குளிர்சாதன மையங்களில், வெப்பநிலையும் உறைநிலை நீக்க அளவுகளும் (defrosting thresholds) மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டிருந்தன என தெரிவித்திருந்ததன் அடுத்த நாள் கிரேம் டவுனி விடுத்த கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
எச்சரிக்கை அமைப்பு
இதனிடையே, எந்தவொரு உடல்நல பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை, மேலும் இரத்தப் பொருட்கள் எதுவும் வீணாகவில்லை என்று EFS தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, அந்த மையங்களில் இருந்த எச்சரிக்கை அமைப்பு காரணமாக சேமிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் EFS தெரிவித்துள்ளது.
சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள், இரத்த மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்மா பைகள் மற்றும் மருந்துகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்மா ஆகியவை ஆகும்; இவை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டன அல்லது பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இரத்த சேகரிப்பு மற்றும் விநியோகப் பணிகள் தடையின்றி தொடர்வதால், மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்குத் தொடர்ச்சியான சேவைகள் உறுதி செய்யப்படுகின்றன என்று பிரெஞ்சு அரசாங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன், லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டிகளும் சைபர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், இரத்த வங்கிகளிலும் இந்த சைபர் தாக்குதல் சம்பவங்கள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.