பிரித்தானியாவில் எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல்! NHS-க்கு ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை!
NHS-ல் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல் 14 மில்லயனை கடக்கக்கூடும் என பிரித்தானியாவின் மிகவும் மதிக்கத்தக்க ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக, பல மாதங்களாக கோவிட் சிகிச்சைகளைத் தவிர பிற சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்துவைக்கப்பட்டிருந்தது.
இதனால், அறுவை சிகிச்சைகள் உட்பட பல முக்கிய சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளின் காத்திருப்போர் பட்டியல் சில ஆயிரங்களிலிருந்து தற்போது பல மில்லியனாக உயர்ந்துள்ளது.
இதனால், NHS-இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்கப்படும் எண்ணை விட காத்திருக்கும் பட்டியலில் சேரும் எண் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
இப்போது வரை காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளித்து முடிக்கவே 2023-ஆம் ஆண்டு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
இந்த நிலை நீடித்தால், இங்கிலாந்தில் NHS காத்திருப்பு பட்டியல்கள் 13 மில்லியனாக உயரக்கூடும் என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கடந்த மாதம் எச்சரித்தார்.
ஆனால், தற்போது நிதி ஆய்வுகளுக்கான நிறுவனமான Institute for Fiscal Studies (IFS), இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
IFS-ன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில், காத்திருப்பு பட்டியல்கள் 2022 செப்டம்பர் மாதத்தில் 14 மில்லியனாக உயரும், பின்னர் காத்திருப்பு பட்டியலில் சேரும் எண்ணிக்கை சிகிச்சை பெறும் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து நோயாளிகளும் திரும்பி வருவது சாத்தியமில்லை, ஏனெனில் சிலர் இறந்துவிடுவார்கள், மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருக்கலாம் அல்லது அவர்களின் நோய்களுடன் வாழத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என IFS கூறுகிறது.
ஆனால், இதற்கிடையில் 'காணாமல் போன' நோயாளிகள் என்று அழைக்கப்படும் 7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் NHS-க்கு சிகிச்சைக்காக திரும்ப வந்தால், காத்திருப்போர் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக IFS எச்சரித்துள்ளது.