ஸ்தம்பிக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்... நடைபாதையில் இறக்கும் நோயாளிகள்
பிரித்தானியாவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் நடைபாதையிலேயே இறக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய அரசாங்கத்தின் மீது
பிரித்தானியாவின் ராயல் நர்சிங் கல்லூரி இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், இதுவரை பிரித்தானியா முழுவதும் 5000 ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன நிறுத்துமிடம், குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் நோயாளிகளுக்கான தற்காலிக பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இப்படியான செயற்பாடுகள் நோயாளிகளை ஆபத்தில் தள்ளும் என்றும் ஆக்ஸிஜன், இதய கண்காணிப்பு கருவிகள் மற்றும் உறிஞ்சும் கருவிகள் போன்ற முக்கிய உபகரணங்களை செவிலியர்களால் அணுக முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் இந்தப் பிரச்சினைகளைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று ஒப்புக்கொள்வதாக தெரிவித்திருந்தாலும், முந்தைய அரசாங்கத்தின் மீது பழி சுமத்தியுள்ளார்.
கடந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட NHS அறக்கட்டளைகள் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல் நோயாளிகள் மற்றும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளை நாடியயுள்ளதை அடுத்து பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
400 பக்க அறிக்கை
இதனிடையே வெளியான தரவுகளில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 5,400 ஆக இருந்த காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் சராசரியாக 5,000 க்கும் குறைவாகக் குறைந்தது என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ராயல் நர்சிங் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள 400 பக்க அறிக்கையில், அவசர சிகிச்சை அளிக்க ஏற்படும் தாமதம் காரணமாக நோயாளிகள் மாரடைப்பால் இறக்கிறார்கள் என்றும், ஒரு செவிலியர் மட்டுமே பலரையும் கவனிக்கும் நிலை இருப்பதால் காத்திருப்பு அறைகளில் தள்ளுவண்டிகள் மற்றும் நாற்காலிகளில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவமனை நடைபாதைகளில் காத்திருக்கும் நோயாளிகள் 20 முதல் 30 பேர்களுக்கு ஒரு நர்ஸ் மட்டுமே அனுமதிக்கப்படும் நெருக்கடியும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |