தீபாவளி விருந்தில் மறைந்த ரத்தன் டாடாவுக்கு புகழாரம் சூட்டிய நீடா அம்பானி
தீபாவளியை ஒட்டி நடத்தப்பட்ட விருந்தில் மறைந்த ரத்தன் டாடாவுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி புகழாரம் சூட்டியுள்ளார்.
நீடா அம்பானி புகழாரம்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா கடந்த புதன் கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பிரபல தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல்களை தெரிவித்தனர்.
இதையடுத்து, அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என பரிந்துரைக்க மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி நடத்தும் விருந்தின்போது ரத்தன் டாடாவுக்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய நீடா அம்பானி, "இந்தியாவின் தலைசிறந்த மகனான ரத்தன் டாடாவை நாம் இழந்துள்ளோம். அவரது மறைவு நமக்கு மீள முடியாத துயரமாகும்.
எனது கணவர் முகேஷ் அம்பானி, எனது மாமனார் மற்றும் குடும்பத்திற்கு ரத்தன் டாடா நெருங்கிய நண்பர் ஆவார். அதோடு, எனது மகன் ஆகாஷ் அம்பானிக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
அவர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட தொழிலதிபர், உதவுவதில் தாராள தன்மை கொண்டவர் ஆவார். சமூகம் மேம்பட வேண்டும் என்று தொடர்ந்து உழைத்துள்ளார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |