சிக்ஸர்மழை பொழிந்த உகண்டா கேப்டன்: கடைசி பந்தில் 1 ரன்னில் தோல்வி
Nigeria beat uganda by 1 run: நைஜீரியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் உகாண்டா அணி 1 ரன்னில் தோல்வியுற்றது.
ஐசிசி ஆடவர் டி20 உலக கிண்ண ஆப்பிரிக்க துணைக் கண்ட தகுதிச்சுற்று போட்டியில், உகாண்டா அணியை 1 ரன் வித்தியாசத்தில் நைஜீரியா வீழ்த்தியது.
ஐசாக் டன்லதி 47 ஓட்டங்கள்
உகாண்டா, நைஜீரியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலக கிண்ண ஆப்பிரிக்க துணைக் கண்ட தகுதிச்சுற்று போட்டி அபுஜாவில் நடந்தது.
முதலில் ஆடிய நைஜீரியா அணி 19.4 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஐசாக் டன்லதி (Isaac Danladi) 28 பந்துகளில் 47 ஓட்டங்களும், அலி ரஹ்மோன் 23 பந்துகளில் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜோசப் பகுமா 4 விக்கெட்டுகளும், ஜுமா மியாகி 2 விக்கெட்டுகளும், ராம்ஜனி, கசைஜா மற்றும் வைஸ்வா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ரியாஸத் அலி ஷா சிக்ஸர்மழை
பின்னர் ஆடிய உகாண்டா அணியில் கேப்டன் ரியாஸத் அலி ஷா (Riazat Ali Shah) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த போதும் அலி ஷா அதிரடி அரைசதம் விளாசினார். 36 பந்துகளை எதிர்கொண்ட அலி ஷா, 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தில் உகாண்டா அணிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட, மியாகி இரண்டாவது ரன் ஓடும்போது ரன்அவுட் ஆனார்.
இதனால் உகாண்டா அணி 20 ஓவர்களில் 147 ஓட்டங்கள் எடுத்ததால், நைஜீரியா 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
