நிஜ்ஜர் கொலை வழக்கில் அதிரவைக்கும் திருப்பம்... கனடா வெளியிட்ட மிக முக்கிய தகவல்
சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கில் சமீபத்தில் கைதான நான்காவது நபர், முதன்மை குற்றவாளிகளில் ஒருவர் என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கொலைகாரர்களில் ஒருவர்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய ஆலயத்தின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கில் இதுவரை நால்வர் கைதாகியுள்ளனர். நால்வரும் இந்தியர்கள் என்ற நிலையில், சமீபத்தில் கைதான நான்காவது நபரே கொலைகாரர்களில் ஒருவர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால் இந்த நால்வருக்கும் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே நம்பப்படுகிறது. ஏற்கனவே, நிஜ்ஜர் கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பிருப்பதாக கனேடிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் ஒன்ராறியோவின் பிராம்டன் பகுதியில் குடியிருந்து வந்த 22 வயதான Amandeep Singh மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நபர் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே வேறு வழக்கில் சிக்கி, விசாரணக் கைதியாக சிறையில் உள்ளார்.
2023 ஜூன் மாதம் 18ம் திகதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கொலை செய்த இரு துப்பாக்கிதாரிகளில் அமந்தீப் சிங் என்பவரும் ஒருவர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நால்வரும் இந்தியர்கள்
கனேடிய குடிமகனான நிஜ்ஜர், இந்தியாவில் காலிஸ்தான் இயக்கத்தின் முதன்மையான தலைவர்களில் ஒருவர். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை இரண்டாக பிரிக்கக் கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்தியாவின் ஆளும் நரேந்திர மோடி அரசு தீவிரவாதிகள் என்றே அடையாளப்படுத்தி வருகிறது.
தற்போது நிஜ்ஜர் கொலை வழக்கில் நால்வர் கைதாகியுள்ளனர். இந்த நால்வரும் இந்தியர்கள் என்பதுடன், தற்காலிக விசாவில் இவர்கள் நால்வரும் கனடா வந்துள்ளனர். அத்துடன் மிக மோசமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 3ம் திகதி கைதான அமந்தீப் சிங் மீது விதிகளை மீறி ஆயுதம் வைத்திருத்தல், போதை மருந்து, போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு, விசாரணைக் கைதியாக இருந்தார்.
கைது நடவடிக்கையின் போது அவரிடம் இருந்து துப்பாக்கிகள் சில கைப்பற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |