கனடா - இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்ட வழக்கில் நான்காவது நபர் கைது
கனடாவில் சீக்கிய சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் வசித்துவரும் இந்தியர்
குறித்த நபர் கனடாவில் வசித்துவரும் இந்தியர் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதான Amandeep Singh என்பவரே பீல் பிராந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது ஏற்கனவே விதிகளை மீறி ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு, காவலில் இருக்கும் நிலையில் தற்போது முதல் நிலை கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளது.
அமந்தீப் சிங் இந்திய நாட்டவர் என்பதை உறுதி செய்துள்ள பொலிசார், அவர் பிராம்டன், சர்ரே மற்றும் அபோட்ஸ்ஃபோர்ட் பகுதிகளில் வசித்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அமந்தீப் சிங் தொடர்பில் மேலதிக தகவல் எதையும் வெளியிட பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கு தொடர்பில் இந்தியர்களான கரண் பிரார், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகியோர் கைதாகினர்.
இந்திய உளவு அமைப்பே
இவர்கள் மூவர் மீதும் முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் சீக்கிய ஆலயம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் மர்ம நபர்களால் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார்.
நிஜ்ஜர் விவகாரம் கனடா மட்டுமின்றி இந்திய அரசாங்கம் தரப்பிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.
தங்களிடம் போதிய உளவு ஆவணங்கள் இருப்பதாகவும், இந்திய உளவு அமைப்பே இதன் பின்னணியில் இருப்பதாகவும் அவர் அம்பலப்படுத்தினார். ஆனால் இந்தியா தரப்பு ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்தது.
மேலும், இந்த கைது நடவடிக்கைகள், சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் அனுமதி செயல்முறையை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |