பிரித்தானியாவில் பத்தில் ஒன்பது பேர் உடலில் கொரோனா ஆன்டிபாடிகள்: வெளியாகியுள்ள பாஸிட்டிவ் செய்தி
பிரித்தானியாவில் வயதுவந்தவர்களில் பத்தின் ஒன்பது பேருக்கு உடலில் கொரோனா ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரித்தானியாவில் விரைவில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் என்ற பாஸிட்டிவ் செய்தி வெளியாகியுள்ளது. இரத்தப் பரிசோதனைகளில், இங்கிலாந்தில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 89.8 சதவிகிதத்தினர் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மே மாதத்தில் இது 79.6 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 89.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது, தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியை பிரதிபலிப்பதாக உள்ளது.
ஆன்டிபாடிகள் என்பவை, ஒருவர் தொற்றுக்கு ஆளானாலோ, தடுப்பூசி போட்டுக்கொண்டாலோ உருவாகும் செல்களாகும். இவை வைரஸை எதிர்த்து போராடும் திறன்கொண்டவை.
ஜூன் 14 முதல் பல்லாயிரக்கனக்கான வயதுவந்தோருக்கு இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் தேசிய புள்ளி விவர அலுவலகத்தால் சேகரிக்கப்பட்டன.
அதன்படி, 60 முதல் 79 வயது வரையுள்ள வயதுவந்தவர்களில் ஆன்டிபாடிகள் அதிகம் உள்ளது தெரியவந்தது (97 சதவிகிதம்). அதேநேரத்தில், 16 முதல் 24 வயதுடையவர்களில் பத்தில் ஆறு பேருக்கே ஆன்டிபாடிகள் உள்ளன.
ஆனாலும், பிரித்தானியா மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை நெருங்குவதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதற்கு காரணம் என்னவென்றால், எப்போது ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 85 சதவிகிதத்தினர் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகின்றனவோ, அப்போது அந்த நாட்டில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என நிபுணர்கள் கருதுவதுதான்!