சுவிஸ் குடிமக்களாக ஆக விரும்புவோருக்கு பயனுள்ள ஒரு செய்தி: ஒரு நினைவூட்டல்...
சுவிஸ் குடிமக்களாக ஆக விரும்பும் அனைவரும், அதற்காக சுவிஸ் குடியுரிமைத் தேர்வு (citizenship exam) ஒன்றை எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.
பொதுவாக இத்தகைய தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளைப் போல அல்லாமல், சுவிஸ் குடியுரிமைத் தேர்வில், சில எதிர்பார்க்க முடியாத வகையிலான வித்தியாசமான கேள்விகள் கேட்கப்படுவதுண்டு.
கடந்த சில ஆண்டுகளாக சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான தேர்வுகளில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டன. அவை குறித்து உங்களுக்கு ஒரு நினைவூட்டல்...
உள்ளூர் உயிரியல் பூங்காவில் காணப்படும் கரடிகள் மற்றும் ஓநாய்கள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?
இது என்னடா கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்தக் கேள்விக்கான விடை தெரியாததால், இத்தாலியர் ஒருவரின் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது!
பிறகு, அவர் சுவிஸ் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, மாகாண அதிகாரிகளின் முடிவு மாற்றிக்கொள்ளப்பட்டது.
நீங்கள் வாழும் பகுதியில், கடந்த 250 ஆண்டுகளில் நிலச்சரிவுகள் ஏதாவது ஏற்பட்டனவா?
இந்தக் கேள்வியில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், உள்ளூர் உயிரியல் பூங்கா குறித்த கேள்விக்கு விடை தெரியாததால் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட அதே இத்தாலி நாட்டவர், 200 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவு குறித்து அறிந்து வைத்திருந்ததை மேற்கோள் காட்டியே, மாகாண அதிகாரிகளின் முடிவுக்கு எதிராக, அந்த இத்தாலியருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு சாதகமான தீர்ப்பளிப்பதற்கு நிலச்சரிவு குறித்து அவர் குறிப்பாக அறிந்து வைத்திருந்தது காரணமல்ல என்று கூறிய நீதிமன்றம், அவர் தான் வாழும் பகுதி குறித்து மிக அதிகமாக அறிந்து வைத்திருந்ததுடன், மக்களுடன் நன்றாக ஒன்றிணைந்து வாழ்ந்துவந்துள்ளார் என்றும், ஆகவே அவரது குடியுரிமை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
சுவிட்சர்லாந்தின் தலைநகர் எது?
ஒரு நாட்டில் குடியுரிமை கோரி விண்ணப்பிப்போருக்கு கட்டாயம் அந்த நாட்டின் தலைநகர் தெரிந்திருக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆகவே இது ஒரு தரமான கேள்விதான் என்றே தோன்றுகிறது இல்லையா? ஆனால், இது ஒரு தந்திரமான கேள்வியாகும்...
ஏனென்றால், சுவிட்சர்லாந்துக்கு தலைநகர் கிடையாது!
பொதுவாக Bern நகரை சுவிட்சர்லாந்தின் தலைநகர் என்று கூறினாலும், அதில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளதாலேயே அதை சுவிட்சர்லாந்தின் தலைநகர் என மக்கள் கருதுகிறார்கள், உண்மையில் Bern ஒரு பெடரல் நகரம், அவ்வளவுதான்...
உங்களுக்கு நடைப்பயணம் (hiking) பிடிக்குமா?
இந்தக் கேள்விக்கு தவறான பதில் என்று இருக்க முடியாது என நீங்கள் நினைக்கலாம் இல்லையா? ஆனால், சுவிஸ் குடியுரிமைத் தேர்வைப் பொருத்தவரை அப்படி இல்லை.
2017ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வந்த Funda Yilmaz (25) என்ற பெண், சுவிஸ் குடியுரிமைத் தேர்வு எழுதினார். அவர் உள்ளூரில் வேலை பார்த்துவருகிறார், சரளமாக ஜேர்மன் மொழி பேசுகிறார், சுவிஸ் குடிமகன் ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறார், ஆனாலும், உங்களுக்கு நடைப்பயணம் (hiking) பிடிக்குமா? என்ற கேள்விக்கு, அவர் பிடிக்காது என்று பதிலளிக்க, வேறு சில கேள்விகளுக்கான பதில்களும் திருப்திகரமாக இல்லாமல் போக, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆக, யாராவது உங்களிடம், உங்களுக்கு நடைப்பயணம் (hiking) பிடிக்குமா? என்று கேட்டால், ’பிடிக்குமா? எனக்கு நடைப்பயணம் என்றால் உயிர், எனக்கு ஒரு சுவிஸ் பாஸ்போர்ட்டைக் கொடுங்கள், நான் இப்போதே நடைப்பயணத்துக்கு போகிறேனா இல்லையா என்று அப்புறம் பாருங்கள்’ என்று பதில் சொல்லிவிடுங்கள்!
விடுமுறையில் நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்?
இதுவும் ஒரு முக்கியமான கேள்வியாகும். முந்தைய கேள்வியைப்போலவே நான் ஆல்ப்ஸ் மலைக்குப் போக விரும்புகிறேன் என நீங்கள் கூறிவிடவேண்டும் என எண்ணத்தோன்றுகிறது அல்லவா? ஆனால், இந்தக் கேள்வி, குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் நபர், உண்மையாகவே தான் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்துள்ளதாக உணர்கிறாரா அல்லது, தன் ‘சொந்த நாட்டுக்கு’ அவ்வப்போது சென்று வரும் திட்டம் வைத்திருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக கேட்கப்படுகிறது.
அதாவது, நீங்கள் எந்த நாட்டிலிருந்து வந்தீர்களோ, அதே நாட்டுக்குச் சென்று விடுமுறையை செலவிட விரும்புவீர்களானால் நீங்கள் (இன்னும்) உண்மையாகவே சுவிஸ் குடிமகனாகத் தயாராகவில்லை என பொருளாகிவிடலாம்.
எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணையை (partner) எதிர்பார்க்கிறீர்கள்?
குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் ஒருவர், எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணையை எதிர்பார்க்கிறார் என்பதிலிருந்து, அவர் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்துள்ளாரா என்பதைத் தீர்மானிக்க முடியும் என கருதப்படுகிறது.
அதாவது, ஒருவர் தன் சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரையே வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்க விரும்பும் பட்சத்தில், அவர்கள் போதுமான அளவுக்கு சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணையவில்லை என கருதப்படும்.
எந்த விளையாட்டுக்கள் எல்லாம் சுவிஸ் விளையாட்டுக்கள்?
உங்கள் குடியுரிமைத் தேர்வில் இந்த கேள்வி கேட்கப்படுமானால், நீங்கள் ஒரு சுவிஸ் விளையாட்டைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிடவேண்டுமேயொழிய, சுவிட்சர்லாந்தில் பிரபலமாக விளையாடப்படும் ஒரு விளையாட்டை பதிலாகக் குறிப்பிடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
சுவிஸ் தேசிய கீதத்திலுள்ள வார்த்தைகள் என்னென்ன?
பள்ளியில் படிக்கும்போது பெரும்பாலானோர் தேசிய கீதத்தைக் கற்றுக்கொண்டிருந்தாலும், வயது வந்தவர்களாகும்போது பலர் அதை மறந்துவிடுகிறார்கள்.
ஆனால், எந்த நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கிறீர்களோ, அந்த நாட்டின் தேசிய கீதத்தின் வார்த்தைகளை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
சுவிஸ் உணவான raclette எங்கிருந்து வருகிறது?
சுவிட்சர்லாந்துக்காரர்கள் சீஸ் அல்லது பாலாடைக்கட்டி என்பதை ஒரு சீரியஸான விடயமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
2018இல் பிரித்தானிய குடிமகன் ஒருவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, அவருக்கு அந்த கேள்விக்கான பதில் தெரியாததும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
பின்குறிப்பு: இந்த கேள்விகள், புரிந்துகொள்வதற்கு உதவும் பொருட்டு உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ள, முதலில் ஆங்கிலத்திலும் பின்பு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கேள்விகள் மட்டுமே என்பதை கருத்தில் கொள்ளவும்.